Tags

, , , , ,

அத்திம்பேர் என்றவுடன் நமக்கெல்லாம் நினைவுக்கு வருவது வீச்சும் விரைச்சுமாக இருக்கும் ஒருவர்தான். இதில் மிக மிக நல்ல அத்திம்பேர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களை வைத்து கதையோ நையாண்டியோ எப்படி செய்வது?

நம்ம அத்திம்பேர் நல்லவர் தான். ஆனால் கொஞ்சம் தான் மட்டும் அதி மேதாவின்னு, மிச்சவாள்ளாம் ஏதோ பாக்கியவசத்தினாலே தங்கூட இருக்கறதா நினைப்பு. மித்தபடி அவர் பாட்டுக்கு அவர் உண்டு அவர் வேலை உண்டுனு தான் இருப்பார். ஆனா அவரோட வேலையை அவர் பாக்கறச்சேயே நிறைய பேருக்கு நிம்மதி போயிடும். இவரோட மேதாவித் தனத்திற்கு ஒரு உதாரணம் பக்கத்தாத்து பத்மநாபனோட இவர் பேசினது:

பத்து: நமஸ்காரம் அத்திம்பேர். (இவர் அவனுக்கு அத்திம்பேர் இல்லையென்றாலும் அந்தத் தெருவே அவரை அப்படித்தான் கூப்பிடும்)

அத்தி: வாடா வா பத்த்து. என்னடா பேரு இது பத்து எச்சல் னு?

பத்து: அது என்னவோ யாரு கண்டா?

அத்தி: ஆத்துல எல்லாரும் எப்டி இருக்காடா?

பத்து: எல்லாரும் நன்னா இருக்கா அத்திம்பேர்.

அத்தி: இரு, ஒங்க பாட்டி ஒரு பொஸ்தகம் கேட்டா, எடுத்துண்டு வரேன்.

பத்து: எங்க இருக்கு, நான் எடுத்துக்கறேனே, நீங்க சிரமப்படுவானேன்?

அத்தி: கூடாது டா. நம்மளே நம்ம வேலையைப் பாத்துண்ட்டோமானா ப்ரச்னையே இல்லை. ஆதி சங்கரர் பாஷ்யம் எழுதலாமேன்னு லலிதா ஸஹஸ்ரநாமத்தை எடுத்துண்டு வான்னாராம். சிஷ்யன் ஒரு வாட்டி இல்லாம மூணு வாட்டியும் விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தையே எடுத்துண்டு வந்தானாம். இதுலேர்ந்து என்ன தெரியறது நோக்கு?

பத்து: அவர் ஏதோ தெய்வ சங்கல்பம் விஷ்ணு ஸஹஸ்ரநாமத்துக்குத் தான் பாஷ்யம் எழுதணும்னு இருக்கு போலர்க்கு னு அதுக்கே எழுதினார்னு பாட்டி சொல்வா.

அத்தி: அது கரெக்டு டா. ஆனா, அவர் சிஷ்யனை ஏவாம தானே போய் எடுத்துணுட்டார்னாக்கா?

பத்து விழித்தான். என்ன சொல்வதென்று தெரியவில்லை. மேற்கூறிய சம்பவம் ஒன்றே போதுமென்று நினைக்கிறேன் அத்திம்பேர் எப்படிப்பட்டவர் என்று அறிந்து கொள்ள. இப்படிப்பட்டவருக்கு திடீரென்று யோசனைகள் தோன்றுவது இயற்கை தானே. ஒரு நாள் மழை கொட்டிக் கொண்டிருக்கறச்சே மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்த கவர்மெண்டே இப்படித்தான் என்று ஜன்னலைத் திறந்து வைத்துக் கொண்டு சிறிது நேரம் வசைபாடிக் கொண்டிருந்தவர் மஹாப் பெரிய கொடி மின்னல் ஒண்ணு மின்னி ஒரு இடி இடித்தவுடன் சத்தத்தில் அரண்டு போய் ஈஸி சேரில் சாய்ந்து கொண்டு யாருக்கும் கேட்காதைக்கு ‘அர்ஜுனா அர்ஜுனா’ ன்னார். யாரானும் கேட்டுட்டா “ஹு, அத்திம்பேர் பயந்துட்டார்” னுடுவாளாம்.
அப்போ ஒரு பொறி தட்டியது அவருக்கு. எங்கேயோ படிச்ச நியாபகம். ஆஹா!

பத்து என்னிடம் மெதுவாக சொல்ல ஆரம்பித்தான்.

பத்து: மாமா, யார்கிட்டயும் சொல்லிட மாட்டேளே?

மாமா: ஏண்டா, எனக்கென்ன வேற வேலையில்லைனு நினைச்சியோ?

பத்து: அன்னிக்கி எதித்தாத்து குலசேகரன் மாமாவை அந்த மாமி ‘இந்தக் கூமுட்டைக்கு சொல்றதைவிட ஒரு கழுதைக்குச் சொல்லலாம்’ னு திட்டிண்டிருந்தா எனக்கு முன்னாடியே, அப்பறம் குழவிக்கட்டையை
ஓங்கினான்னு உங்ககிட்ட நான் சொன்னதை அவாகிட்டயே போய் கேட்டுட்டேளே, எனக்கு அதுக்கப்பறம் அவாளை பாக்கவே முடியறதில்லை.

மாமா: ஹாஹாஹா, அவாத்துல போய் நான் ‘கூமுட்டை சேகரன் இருக்காரான்னு கேட்டேனேன்னு நோக்குக் கோவமாடா’?

பத்து: நான் என்ன மாமா பண்ணினேன் உங்களுக்கு?

மாமா: சரி சொல்ல வந்த விஷயத்தைச் சொல்லு.

பத்து: இப்போ நான் சொல்லப் போற விஷயத்துக்கு நானும் அத்திம்பேரும் தான் சாட்சி. வேற யாரும் பார்க்கலை. அதனால தான் பயப்படறேன்.

மாமா: சரி அதை விடுடா. இந்த அத்தி என்ன பண்ணினான், அதைச் சொல்லு!

பத்து: அவருக்கு ஒரு கொடெளன் இருக்கொன்னோ, அன்னிக்கி அதில இருந்ததையெல்லாம் காலி பண்ணிட்டு அதோட கூரையெல்லாம் பிரிச்சு வெச்சுட்டார்!

மாமா: என்னத்துக்காம்?

பத்து: அப்பறம் என்னை விட்டு மாடு வெச்சுறுக்கறவா எல்லார் கிட்டயும் போய் ஒரு நோட்டீஸ் குடுக்கச் சொன்னார்.

மாமா: ஓஹோஹோ, அதைத்தான் இவ அன்னிக்கு ‘இதுக்கு வேற வேலையில்லைண்டே கிழிச்சு எறிஞ்சாளா? என்ன இருந்தது அதிலே?

பத்து: அவர் என்ன பண்ணினார்னு சொல்றேன். நோட்டீஸ் முக்கியமில்லை.

மாமா: நீயும் உங்கப்பன மாதிரியே வெட்டி வெட்டிப் பேச ஆரம்பிச்சுட்டாய் வர வர.

பத்து: ஸாரி மாமா. சரி கேளுங்கோ. எங்கேர்ந்தோ நிறைய சாணி வாங்கிண்டு வந்தார்.

மாமா: அப்போ நோட்டீஸ்ல அதான் இருந்திருக்கும். சாணி போடுங்கோ மக்களே, ன்னு?

பத்து: நீங்க ஜீனியஸ் மாமா (கேட்டியாடி? வந்து இதை மாமிகிட்ட சொல்றா!), இதுல அவர் என்னை துணைக்கு வேற வெச்சிண்டார். சாணி கப்பு தாங்கலை நேக்கு. அவரானா ஒரு மாஸ்க் போட்டுண்டு இருந்தார். நான்
கர்ச்சீப்பைக் கட்டிண்டு அவஸ்தைப் பட்டேன்.

மாமா: அம்புட்டுச் சாணியை என்ன பண்ணினான்?

பத்து: அதையெல்லாத்தையும் குமிச்சு வைச்சு, நடுவுல ஒரு பள்ளம் மாதிரி பண்ணி அதுக்குக் கீழே ஒரு தடீ வயறை எதிலயோ கனெக்ட் பண்ணினார். அந்த வொயரோட இன்னொரு முனைல ஒரு ட்ரான்ஸ்ஃபார்மர் மாதிரி இருந்த ஒரு டப்பாவை கனெக்ட் பண்ணினார். இன்னும் என்னவெல்லாமோ இருந்தது அதிலே, எனக்கொண்ணும் புரியலை.

மாமா: (கெட்டியான வெல்லச் சீடையைக் கடிச்சவராட்டமா ஒரு பார்வை பார்த்து) என்னடா சொல்றே?

பத்து: ஆமா மாமா. கூத்தைக் கேளுங்கோ. அத்திம்பேர் சொன்னார்: “மின்னல் நேரடியா மாட்டுச் சாணத்துல விழுந்தா வைரம் ஆயிடும்னு சொல்றதெல்லாம் கப்ஸா. ஆனா மின்சாரம் கிடைக்கும் அதிலேர்ந்து. அத்தை சேமிச்சா ஒரு தேசம் முழுசுக்கும் ஒரு வருஷத்துக்கு மின்சார தடை ஏற்படாதுன்னு சொன்னார். அதோட மின்னலை சேமிப்பதற்கு ஒரு உபகரணமும் கண்டுபிடிக்கப்படல்லைன்னும் அதைத் தான் கண்டுபிடிச்சுட்டேன்னும் சொன்னார்.”

மாமா: ஆஹ் இவன் கண்டான்! அப்பறம் என்ன ஆச்சுடா? ரெண்டு நாளா பெரிய இடி மின்னலோட மழை பேஞ்சதே, அதான் உன்னைக் காணலைனு நினைச்சேன். என்ன ஆச்சு அப்புறம், சீக்கிரம் சொல்லு .

பத்து: நாங்க ரெண்டு நாளா வெறும்ன அந்த கோடெளனுக்குள்ளயே இருந்தோம். இதில அப்பப்போ சாணியக் கிளறி தண்ணி விடுடா பத்து, அப்போத்தான் அது கெட்டிமனாகாம இருக்கும் னு வேற சொல்லி பிராணனை வாங்கினார்.

மாமா: ஹாஆஹ்ஹாஆஹா – உங்கப்பனுக்குத் தெரிஞ்சா, நீ அதுக்குத்தான் லாயக்குனு நேக்குத் தெரியுமே ஏற்கனவேம்பான்.

பத்து: மாமா, உங்களுக்குக் கோடி நமஸ்காரம் பண்ணறேன் யார் கிட்டையும் சொல்லிடாதேங்கோ. ப்ளீஸ்!

மாமா: நீ மேல சொல்லு.

பத்து: நானும் கிளறினேன். நேத்திக்கி ஒரே மழை. நிறைய மின்னல் வேற. நாங்க ஒரு ஓரமா உக்காந்து இருந்தோம். திடீர்னு ஒரு பெரிய மின்னல் மின்னினது பாருங்கோ, நாங்க பயந்து போய் கண்ணை இறுக்கி மூடினுட்டோம். ஒரு பெரிய இடியோசை.

மாமா: ஆமாண்டா, பெரிய இடி ஒண்ணு இடிச்சது. நாங்கூட கட்டில்லேர்ந்து தொம்னு விழுந்துட்டேன் கீழ. சரி அப்பறம் என்ன ஆச்சு?

பத்து: அதையேன் மாமா கேக்கறேள். மின்னல் நேரா சாணிக் குவியல்ல விழுந்துடுத்து. ஆனா மின்சாரமெல்லாம் ஒண்ணும் வரலை. நான் ராப்பகலா தண்ணி விட்டுக் கிளறினதை எங்க ரெண்டு பேர் மேலையும் சிதறடிச்சுடுத்து.

மாமா: (சிரிப்பை அடக்க முடியாமல் திணறுகிறார், கீழே விழுந்து விடுவார் போல) டேய்..ஹாஹ், என்ன சொன்..ஹாஹ்ஹாஅஹாஅ, இன்னொரு வாட்டி சொல்லு, ஹாஹஹஹஹாஆஆஅ டேய் டேய்…அந்த அத்தி மூஞ்சி எப்டீடா இருந்தது? என்ன சொன்னான் அவன்? ஆஹா நான் பாக்கலையே? ஹாஹாஹாஆ…..ஆஆ

பத்து: பாத்தேளா, கேலி பண்ணறேள், நான் போறேன் எங்காத்துக்கு, உங்க கிட்ட போய் சொன்னேனே.

மாமா சிரிப்பை அடக்க முடியாமல் திணறுவதைக் கண்ட மாமி “என்னத்துக்கு இப்படி குதிரையாட்டம் கனைக்கெறது இது இப்போ?” என்றாள்.

மறுநாளிலிருந்து பத்து அத்திம்பேரையும் மாமாவையும் கொஞ்ச நாளைக்குப் பார்க்காமலே இருந்தான். ஏனெனில் மாமா மொதல் காரியமா அத்திம்பேர்கிட்ட போயிக் கேட்டாராம்:

என்ன ஓய் அத்தி, நேத்திக்கி ஒரே சாணி மழை போலேர்க்கு?!!!

பி.கு: இது ஒரு கற்பனைக் கதை. பிடித்திருந்தால் கமெண்ட் போடுங்கள். பிடிக்கலையென்றாலும் தான் 🙂