Tags

, , , , , , , , , , , , ,

பேய் பூனை மாதிரி இருக்கும்னு மன்னி சொன்னதைக் கேட்டு சிறுவயதில் ராத்திரியில் பூனையைப் பார்த்தால் அதுக்குக் கால் இருக்கான்னு நடுங்கிக் கொண்டே லுக் விட்டு கன்ஃபர்ம் பண்ணிக் கொள்வேன். ராத்திரியில் ஃப்ரெண்டு வீட்டில் ஓசி டிவி பார்த்து விட்டு வீட்டுக்குக் கிளம்பலாம் என்றிருக்கையில் டிவியில் கடங்காரர்கள் கரெக்டாக கண்காணாமல் போனவர்கள் (க க க போ!) பற்றிய அறிவிப்பைக் காண்பிப்பார்கள். இதில் பிள்ளை பிடிப்பவர்கள் என்ற அதிபயங்கர வில்லன்கள் பற்றிய கற்பனைகள் மனதில் நிறைய இருந்ததால் தனியே வீட்டுக்குச் செல்ல பயமாயிருக்கும். ஓசியில டிவியும் பார்க்க விட்டு வீட்டுக்குத் துணைக்கும் வரும் நல்ல நண்பர்கள் இல்லை அப்போது. அப்படி வந்தார்களென்றாலும் திரும்ப அவர்களை வீட்டிற்குக் கொண்டு விட நான் துணைக்குப் போக வேண்டியிருக்கலாம், இது தீராத விளையாட்டாகி விடுமென்பதால் துணிவே துணை என்று இருக்கும் தெய்வங்களையெல்லாம் கூட அழைத்துக் கொண்டு தனியே கிளம்பி விடுவேன். இத்தனைக்கும் எட்டினார்போலே தான் என் வீடும். கீழே மாடி மூணு இறங்கி, திரும்பி எங்கள் ப்ளாக்கில் இரண்டு மாடி ஏறி, ஸ்ஸ் அவஸ்தை.

ஒரு நாள் வீட்டில் என் அமர்க்களம் தாங்க முடியாமல் தர தரவென்று வெளியில் தள்ளிக் கதவை சாத்தி விட்டார்கள். இரவு ஏழு மணி இருக்கும். பேசாமல் கதவருகில் நின்று கொண்டிருக்கையில் மாடி வீட்டிலிருந்து குஜராத்தி பாட்டி ஒருத்தி படி இறங்கி வரா. பாட்டியா லக்ஷணமா ஒரு புடவை கட்டிக்க மாட்டாளோ? குஜராத்தி ஸ்டைல்லே வெள்ளை கலர்ல ஒரு பாவாடை மாதிரி போட்டுண்டு, அதே வெள்ளையிலே முழுக்கை வைச்சு சட்டையுமில்லாம சுடிதாருமில்லாம சோளக்காட்டு (வயல்) பொம்மை மாதிரி ஒரு ட்ரெஸ்ஸைப் போட்டுண்டு வந்தா. போதாத்துக்கு அதே கலர்ல தலையிலே முக்காடு வேற. அட கால் இருக்கா இல்ல மொதக்கறாளான்னு பாக்க முடியலை. ஒரு வவ்வால் வேற கூடுதல் எஃபெக்டுக்கு பறந்து வந்து வெளி லைட்டைச் சுத்தி பறந்து வயித்தெரிச்சலைக் கொட்டிக் கொண்டது. இதையெல்லாம் பார்த்து நான் அலறின அலறல்ல எங்க தன் பின்னாலதான் பேய் நிக்கறதோன்னு அவ ஒரு அலறல் போட, வீட்டில இருந்தவர்கள் எல்லாரும் கொழந்தை பயந்து போயிடுத்து போலர்க்கே என்று ஆளுக்கு ஒரு அலறல் போட்டு எனக்குக்  கதவை திறந்து விட்டு விட்டார்கள். நான் வடநாட்டில் இருந்திருந்தால் என்ன கதி ஆகியிருக்கும் பாருங்கள்! நண்டு பயம், சிண்டு பயம், தொண்டு பயம், துறவு பயம், காடு பயம், முக்காடு ரொம்பவே பயம் என்று தெனாலி கமல் மாதிரி சொல்ல ஆரம்பித்திருப்பேன்.

இதில் அப்பா வேறு ‘நான் ராஜஸ்தான் ஃபோர்ட்டுக்குப் போயிட்டு வெளில வர்றப்போ ஒரு சிக்ஸ் ஃபீட், ட்டால் லேடி ஃபிகர் பாத்தேண்டா, அது காத்துல மொள்ள என் பக்கமா மொதந்து வந்தது. காயத்ரி மந்திரம் சொன்னேன் பாரு, டக்குன்னு நின்னுடுத்து’ னு சின்ன வயசிலேயே சொல்லியிருக்கார். “அது ஒரு முஸ்லிம் லேடியோட பேய் ஸார், ஹார்ம்லெஸ் (சரித்தான்), நான் பேசுவேனே அதுங்கூட” என்றானாம் அந்த வாட்ச்மேன். பேயில என்னங்கடா முஸ்லிம், ஹிந்துன்னு படுத்தறீங்கவென்று வேறு எனக்குக் குழப்பம்.

ஹிந்திப் பாட்டுகளில் ஓஓஒ வென்று லதா மங்கேஷ்கர் பாட ஆரம்பித்தாளானால் இரவில் வீட்டுத் தோட்டம் பக்கம் போகவே பயமாயிருக்கும். யாரானும் அங்க ஆயேகா, ஆயேகா, ஆயேகா ஆனே வாலான்னு பாடி ஊஞ்சல்ல ஆடினா? இதிலே ஹான்டிங் மெலடீஸ்னு ஸ்பெஷலா லதா அவர்கள் பாடின பேய்ப் பாட்டுக்குன்னே தனியா ஒரு கேஸட்டு வேற. பாட்டை ரசிக்கறதா இல்லை அதில வர்ற பேய்களைக் நினைச்சு அரள்றதான்னு ஒரே குழப்பமாயிருக்கும். அக்கா வேறு பல்லைத் துறுத்திக் கைகளை மை டியர் லிஸா வைத்துக் கொண்டிருப்பாளே அந்த மாதிரி காட்டி அவ்வவ்போது பயமுறுத்துவார். தமிழ்ப் படங்கள் கேட்கவே வேண்டாம். பேய்க்கு யூனிஃபார்ம் வேறு போட்டு விடுவார்கள். வெள்ளைப் புடவை, தலைவிரி கோலம், ஊர்ப்பட்ட கண் மை, சுத்திலும் புகை என்று, காட்டிலே தான் நடக்கும் இது. இப்போ இருக்கற ஜனக்கூட்டத்திலே கொஞ்சம் இந்த சிக்னல், மார்க்கெட், மால்  பக்கமெல்லாம் வராதோ? கொஞ்சமானும் இடத்தை காலி பண்ணுவாளே மனுஷா? இதில் தேமேன்னு முன்னால பார்த்து நடந்து வராது. அட இது நம்ம ஆஇஉஆ தேவி தானே, ஜின்ஜினிக்காஸ்ரீதானே, நேச்சுரலா இருக்கான்னு ஆறுதல் படலாமல்லவா. எங்கையோ முதுகைக் காட்டிண்டு போயி நமக்கு வயித்தைக் கலக்கிடும். பேய் படங்கள் பார்ப்பதற்கு வெகு சுவாரசியமாய் இருக்கும், ஆனால் அதுக்கப்பறம் படற அவஸ்தை இருக்கே, சொறிஞ்சிக்கறப்போ இருக்கற சுகமும் அதன் பின்னால் உண்டாகும் எரிச்சலும் போல ஏக அவஸ்தை. பாத்ரூம் கூட எழுந்து போக முடியாது ராத்திரி தூக்கத்திலேர்ந்து.

பின்னாட்களில் இந்தப் பயம் அதிகமாகிப் போய் தம்பியாண்டான் ஒரு முறை வாஷிங் மெஷின் பக்கத்தில் ஒளிந்திருந்து ஹி ஹி ஹி என்று திடீரென்று எழுந்திருக்க, நான் அரண்டு போயி வாயில் கையை வைத்துக் கடித்தும், ஜிங்கு ஜிங்குன்னு குதித்தும், சேருக்கு அடியில் போய் உட்கார்ந்தும் இன்னும் என்னவோல்லாமோ செய்தேனென்று சொல்லி சிரிக்கிறான் இன்னமும். அம்மா சொல்வார், “போடா, எங்களை என்ன சொல்லி பயமுறுத்துவா தெரியுமா? தலையோட பொறந்தவன் வரப் போறான்னு, ரெண்டு கண்ணன் வர்றான்னெல்லாம் சொல்லிடுவா, அரண்டு போயிடுவோம்” என்பார். அதிலுள்ள அர்த்தத்தைப் பார்க்காமல் வாய்ஸ் மாடுலேஷனைப் பார்த்தால் நமக்கும் பயமாகத் தான் இருக்கும்.  சொல்லிப் பாருங்கள்! நம் மனது அப்படிப் பட்டது. நாமென்ன விவேகானந்தரா “பேய் இருக்குன்னா அது இத்தனை நாளா என்னை ஏன் பிடிச்சுக்கலைன்னு” கேக்கறதுக்கு.

ஒரு நாள் மாமா பையனை பயமுறுத்தலாமென்று ரொம்ப நாழி கதவு பின்னாலே ஒளிந்து கொண்டிருந்தேன். நிழலாட்டம் தெரிந்தது, வந்துட்டான்னு “பேஏஏ” என்று கத்திக் கொண்டே வெளியில் வந்தேன் பாருங்கள், பாட்டி வந்திருக்கிறாள், அரண்டு போய்விட்டாள். அப்போ அவன் சின்னவன், சராசரியா பாட்டி உயரம் தான் இருப்பானா, நிழலை வைத்து உயரத்தை எடை போட்டுத் தப்பாகி விட்டது. பாட்டி “தோசிக் கடங்காரா, ஏண்டா இப்படி வதையைக் கொட்டற” என்றாள் உதடு துடிக்க. இந்த வயசில எல்லாம் தன்னை யாரானும் பே காட்டி பயமுறுத்துவார்கள் என்று சத்தியமாக எதிர்பார்த்திருக்கவே மாட்டாள். விதி யாரை விட்டது?

இதில் சங்கப் பொதுக் கூட்டம் நடத்தின ஏரியாவில் வீட்டுப் பக்கத்தில் ஒரு அண்ணன் தம்பி இருந்தான்கள். அந்த அண்ணங்காரனுக்கும் என்னை மாதிரியே பயம், என்ன லிட்டர் கணக்கா ஜாஸ்தி. இவனை ஒரு நா இருட்டுல (ஒரு ஏழு மணிக்கு மேல) என் தம்பி வீட்டு வாசல்ல வெச்சுப் பேச்சுக் குடுத்துண்டிருக்க, நான் வீட்டு சைடிலேருந்து கிழிஞ்சு போன பழைய வெள்ளை அரிசி சாக்கு, ரிப்பன்னு எதையெல்லாமோ தலைலேர்ந்து கால் வரைக்கும் போட்டுண்டு கீச்சுக் குரல்ல ஹி ஹி ஹீஹீஹீன்னு கத்தின படியே வாசல் பக்கம் ஓடி வர, அவன் கத்தினான் பாரு அம்ம்ம்மா, அம்ம்மான்னு, அப்படிக் கத்தினான், நானே பயந்து போயிட்டேன் அவன் கத்தின கத்தல்ல.

என் தங்கை இருக்கிறாளே, அவள் ஒரு அதிசயப் பிறவி. “இந்தப் பேய் இருக்கே, அதைப் பாக்கணும் நாம்போ, அது எப்படித்தான் இருக்குன்னு” என்பாள். அவளிடம் “அதுக்கெல்லாம் நான் வரலை, மேக்கப் போடாத நடிகை ஃபோட்டோ ஏதானும் தரேன், அதைப் பார்த்துக்கோ” என்று சொல்லி விடுவேன். இந்த கருமாந்திர பயம் வேலை பார்க்க ஆரம்பித்த பின்பும் விடலை. ஒரு நாள் லியோவுடன் ஏதானும் சினிமா போகலாமென்று போனால் டிக்கெட் எதற்கும் இல்லை. பூத் என்று ஒரு ஹிந்திப் படம் வந்திருந்தது (நம்ம ஃபோன் பூத் இல்லைங்க, ஹிந்தில பூத்துன்னா பேயி). அதைப் பார்க்கலாமென்றான் அவன். இல்லை, பேய்க்கும் எனக்கும் ரொம்ப அண்டர்ஸ்டாண்டிங் கிடையாதுன்னு எப்படி அவன்கிட்ட சொல்றது. மேலும் அப்படியென்ன பெரிசா பேய்ப் படம், பாத்துத்தான் வைப்போமே என்று ஒரு நப்பாசை. போய்த் தொலைத்தேன். அந்த இருட்டில், ஸ்பீக்கர் அலறின அலறலில், அந்தப் பேயைப் பார்த்து… யப்பா, அரண்டு போனேன். ஒரு காரணமாத்தானேடா அது பழி வாங்கறதுன்னு எங்களுக்கு நாங்களே சமாதானம் சொன்னாலும் உள்ளூர பயம். இதன் எஃபக்டு எப்படியிருந்ததென்றால், படம் முடிந்து ஒரு ஹோட்டலுக்குச் சாப்பிடப் போனோம். டேபிள்ல எதிரெதிரா அரண்டு போன ரெண்டு கிறுக்குப் பிசாசுகள் உட்கார்ந்திருப்பதை நினைத்துப் பாருங்கள். என் பின்னாலிருந்து திடீர்னு சர்வர் வந்து தண்ணி க்ளாஸ் வைக்க வந்தார். ஹு என்று ஏதோ பேய் வந்தாற்போலே நகந்தேன் பாருங்க, லியோவும் ‘யப்பா, இது ரொம்ப மோசம்டா’ என்றான் அவனும் பயந்து போய். பின்னர் இக்கதையெல்லாம் கேட்டுவிட்டு “இருக்கறத்தே ஏதானும் கோட்டாளி பண்ணுவியே நீ” என்றாள் அம்மா.

பின்னர் தூக்கத்தில் ஹூஊஊஉ என்று பேயைப் பார்த்த நாய் மாதிரியெல்லாம் ஊளையிட ஆரம்பித்து விட்டேன். பின் நானே கண் விழித்து, என்னடா ஏதோ ஊளைச் சத்தம் கேட்டதே, இங்க ஆத்துல நாம மட்டும் தானே இருக்கோம்னு மண்டை குழம்பி அப்புறம் அதை நாய்களின் போக்கை ஸ்டடி பண்ணினாற்போலே எம்போக்கை நானே ஸ்டடி பண்ணி என் ஊளை தான் அதுவென்று கண்டுபிடித்து…, சஷ்டி கவசம் இருந்ததோ, பொழைச்சேன். கொஞ்ச நாள்ல லியோ என்கிட்ட மெதுவா சொல்றான் “டேய், கையில ரோஸ் பீட்ஸ் (க்றிஸ்தவர்கள் ஜபமாலை என்று நினைக்கிறேன்) இருந்துச்சோ, பொழைச்சேன்” என்றான். நானானும் தனியா இருக்கேன் வீட்டிலே, ஊளையிட்டாப் பரவாயில்லை நம்மோடு போகும், இவன் தன் அக்கா வீட்டில் தங்கியிருந்தான். ஊளை எல்லாம் இட்டாயாவென்று கேட்கவில்லை, ஏன் நீ இட்டியான்னு திருப்பிக் கேட்டுட்டான்னா?

அப்புறம் ஸ்லோகம், ஸ்தோத்திரம் என்று நிறைய கேட்டு, மொள்ள மொள்ள இம்ப்ரூவ்மெண்ட் வந்தது. கனவுல பேய் வந்தா என் கையில சிவபெருமானோட சூலாயுதம் வந்துடும். ஓம் நமஷிவாய என்று சொல்லிக் கொண்டே பேயைப் பார்த்து சூலத்தை ஆட்டுவேன், ஒண்ணு பேய் சுவத்தோரமாப் போயி அப்படியே முதுகை சுவர்  மீது வைத்து சாய்ஞ்சபடியே ஏறும் – ப்ரிப்பேர்டா இருக்காம் என்னைப் பார்த்து!, இல்லைன்னா நான் அப்படிப் பண்ணுவேன். ஒவ்வொரு கனவிலும், நிஜமா, நம்புங்கள். இது எப்படியென்றெல்லாம் தெரியாது. ஆனால் பின்னாளில் கனவில் மந்திரமா வர்றது, வெளியில வெறும் ஊளையாகத்தான் இருக்கு என்பதையும் கண்டுகொண்டேன். ரொம்ப ப்ரயத்தனப் பட்டு ஓவர்கம் பண்ண வேண்டியிருந்தது இந்த பயத்தை.

இதையெல்லாம் கேட்டு விட்டு, என்னடா, ஆம்பளைப் பிள்ளை, இப்படியா பயப்படறதுன்னு கேலி செய்த நண்பன் ஒருவனிடம் ஒரு கதை சொன்னேன். நம்ம நாகேஷ் பாலையாவுக்குக் காதலிக்க நேரமில்லை படத்தில் கதை சொல்கிற விதத்தில் சொல்ல வேண்டும் இதை. “ஒருத்தன் கையில ஒரு மோதிரம் போட்டிருப்பான், அதை ஒரு கொள்ளைக்காரன் பறிக்க ட்ரை பண்ணி, முடியாம அவனையும் கொன்று அவன் விரலையே கட் பண்ணியும் விடுவான், அப்புறம் வெகு நாள் கழித்து கொள்ளைக்காரன் ஒரு இரவில் தாகசாந்தி செய்து கொள்ள ஒருவனிடம் தண்ணீர் கேட்க, அவன் தண்ணீர் தருகையில் அவனிடம் ஒரு மாற்றத்தை கவனித்து “என்னங்க உங்க கையில ஒரு விரலைக் காணோம்” என்று கேட்கையில் கதை கேட்டுக் கொண்டிருக்கும் கபோதியை “கப்” என்று (க க க போ!) தோள் பட்டையைப் பிடித்து உலுக்கி “நீ தானே எடுத்தே” என்று அடிவயிற்றிலிருந்து நான் அலறியதில் மூச்சா வந்து விட்டது பையனுக்கு. அத்துடன் விட்டு விட்டான் என்னிடம் வம்பு வைத்துக் கொள்வதை. ஏன் பையன்கள் பயப்படக் கூடாதோ?

இந்தப் பேய்க்கூத்துல ஒரு ஜோக் என்னன்னா, என் ஃப்ரெண்டு ஸ்ரீநிவாசன் கூட கம்ப்யூட்டர் படித்த கூடத்தில் ஒரு வளர்ந்த மாடு இன்னொரு அக்கா மாடுகிட்டே கேட்டது ஒரு கேள்வி:

“அக்கா, இந்த பேங்கிலே எல்லாம் பேயி, பேயர்னெல்லாம் சொல்றாங்களே (Payee, Payer), அப்படீன்னா என்ன?” அதைக் கேட்டபடியே நாங்கள் ரெண்டு பேரும் க்ளாஸுக்குள்ள போகையில் இவன் சொல்றான், திருநெல்வேலி அழகுத் தமிழில்:

“கேக்கற கேள்விய பாத்தியளே, பேயி, பேயர்னு, நீ பொட்டுன்னு போயிட்டீன்னா நீ தான் பேயி. நீ போய் யாரப் பிடிக்கியோ அவந்தாம் பேயர்” என்றான்.

மாரல் ஆஃப் த ஸ்டோரி என்னவென்றால் – குழந்தைகளை அவர்கள் சாப்பிட வேண்டும், படுத்தாமலிருக்க வேண்டும், கக்கா போக வேண்டும் என்பதற்காகவெல்லாம் கண்ணோட பொறந்தவனை எல்லாம் கூப்பிடாதீர்கள். பாவம்.

Advertisements