Tags

, , , , , , , ,

இங்கே அலுவலகத்தில் ஒரு ப்ரதிபந்தம் ஒன்று உண்டு. இவன் பண்ணற வேலை ஒன்றே ஒன்று தான். ஆபிஸ் ஃபோனைக் கொண்டு பெர்சனல் கால்ஸ் பண்ணுவது. இவனோட ம்யுச்சுவல் ஃபண்ட், ரியல் எஸ்டேட், வீட்டு ப்ரச்சினை, மனைவியிடம் வாங்கிய மொத்துக்காப்பு (இதற்கு பாஸ்ட் டென்ஸ் மட்டுமல்ல, நிகழ் மற்றும் எதிர்காலம் நல்லா உண்டு இல்லையா “கல்யாணமான கபோதிகள்” சங்கத்தாரே?) இது எல்லாம் பேசி, போக மீதி நேரமிருந்தால் கஸ்டமர்களைக் கூப்பிடுவான். ஆனா கடைசியாச் சொன்ன வேலைக்காகத் தான் இங்கே அலுவலகத்தில் இவனுக்கு சம்பளம் கொடுக்கிறார்கள். நிறைய பார்த்திருக்கிறோமே நாம தான்.

மதுரையைச் சுத்தின மாடு எங்கேயும் போகாதுன்னு சொல்வார்கள். என்னைப் பொறுத்த வரை நான் எங்கே போனாலும் ஏதாவது ஒரு மதுரை மாடு என்னை சுத்திக்கிட்டே இருக்கு. அதில் இதுவும் ஒன்று. அதுவும் என் சீட்டுக்கு நேர் அடுத்த இருக்கை, ஒரே ஒரு ஃபால்ஸ் அரைச்சுவர் (டேபிள் மேலே இருக்குமே) அதான்.  அதன் மேல் வழியே கையை விட்டு பொடேர் என்று அவன் தலையைச் சேர்த்து ஒரு நா ஒரு போடு போட்டு…கர்ர்ர்ர்ர், வெளியே போயி பேசுடா உன் புராணத்தைன்னு சொல்லலாம்னா, இவன் ஃபோன்ல பண்ணற காமெடி சில சமயம் தூளா இருக்கும். சரி வுடுங்க.

இதில் பக்கத்திலிருப்பவர்களுக்குத் தமிழ் தெரியாது என்பதில் இவனுக்கு ஒரு அலாதி சந்தோஷம், எனக்குத் தமிழ் தெரியும் என்பது இவனுக்குத் தெரியுமா தெரியாதாவென்று எனக்குத் தெரியவில்லை. தெரிந்தாலும் “அதற்காவெல்லாம் கவலைப்பட்ட ஜென்மம்  நானில்லே” என்று பாடினாலும் பாடுவான். மேலும் காண்டெக்ஷுவலாய் கண்டிப்பாக அனுமானிக்கக் கூடியது தானே லோனு, டேக்ஸு, ஃபண்டு, ஏஸி கோச்சு போன்ற இவ்வகை சுத்தத் தமிழ்ப் பேச்சுக்கள்? இருந்தாலும் பக்கத்திலிருப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற இங்கிதம் சங்கீதம் எல்லாம் அறவே கிடையாது தலைவனுக்கு. மதுரைத் தமிழில் நீட்டி மொழக்கி, குரலை ஏத்தி இறக்கி, வாய்ஸை கூட்டிக் கொறச்சு (வீட்டம்மணியிடம் வாய்-மொத்து வாங்குகையில்) இவன் பாட்டு பேசிக்கிட்டே இருப்பான். அப்படி அவன் வாயிலிருந்து உதிர்ந்த சில முத்துக்களை இங்கே சபையேற்றி இருக்கிறேன். தெரிஞ்சால் எனக்கு மொத்துக் காப்பு வைத்து விடுவான், நீங்க பாட்டு ஃபேஸ்புக்குல லைக் போட்டு ஷேர் பண்ணி மானத்தை வாங்கிப்புடாதீங்க, சொல்லிட்டேன். இது அத்தனையும் வெறும் ரெண்டே நாளில் பண்ணியிருக்கிறான், அதுவும் நான் கேட்ட சில மணித்துளிகளில்….சப்போஸ் எங்க ரெண்டு பேருக்கும் ஒரே ஷிஃப்ட் டைமாக இருந்தால் ப்ளாக்கை இவன் புண்ணியத்திலேயே ஓட்டி விடலாம், அவ்வளவு ரசமாயிருக்கும் ஆமாம்!

****************************************

ஹலோ சார், சொல்லுங்க சார், இந்த TVS, Motorola எல்லாத்தையும் வித்துடலாம் சார்!!! ஒண்ணும் செரியில்ல. இந்த Ashok Leyland பரவாயில்லை, அத வெச்சுக்கலாம்!

(ஆ! என்று திகைப்பாகி விட்டது முதன் முதலில் இதைக் கேட்ட போது, இந்த விஷயம் TVS, Moto காரர்களுக்குத் தெரியுமா என்றெல்லாம் யொசிக்கத் தொடங்கும் முன் அப்பாடா, இது ஷேர் மார்க்கெட் பற்றிய விற்கல் வாங்கல் என்று தெரிந்தது),

சரி வெக்கறேன் சார்.

டொக்.
************************************
.. ஹலோ, டேய் செந்திலு, அம்மாக்கு டிக்கெட் புக் பண்ணி ட்ரெயின்ல ஏத்தி வுட்டேன், அது வந்துக்கிட்டிருக்கு (எது, ட்ரெயினா அம்மாவா?), ஆமா, காலைலயே ஸ்டேஷன் போனோம். அங்கன வந்து அத பிக்கப் பண்ணிக்கன்னு (ஆ, அம்மாவைத்தான் அது இதுங்கறான் பையன்) அவங்களுக்குச் சொல்லிட்டேன்.

.. ஹ, போர்வையா, ஆமாடா, ஏஸி கோச் தான், போர்வையெல்லாம் குடுப்பாய்ங்க, அதப் பேசாம போத்திட்டு படுன்னு சொல்லிருக்கேன், ஒண்ணும் ப்ரச்சினையில்ல (?!). சரி, அப்புறம் பேசறேன்.

டொக்.

.. ஹலோ எம்மா, இது ஏஸி கோச்சு, போர்வை இருக்குல்ல, அதப் போத்திக்க, மடிச்சு வெச்சுருக்கும் பாரு, அத மட்டும் எடுத்துக்க, அங்கன ஏதாச்சும் கலச்சுப் போட்டிருந்தாய்ங்கன்னா அதயெல்லாம் எடுக்காத சரியா, அதெல்லாம் அழுக்கா இருக்கும். வேற எவனாய்ச்சும் யூஸ் பண்ணிருப்பான் பாத்து! சரி அப்புறம் பேசறேன். வெய்யி.

டொக்.

(என்ன நினைத்தானோ, மறுபடி கூப்பிட்டான்) எம்மா, அப்புறம், இந்த வெளிய எதனாச்சும் விக்கிறான்னு வாங்கித் தின்னுக்கிட்டிருக்காதெ என்ன? சரியா? பசிச்சா எதையாச்சும் சாப்டுக்க!! வெக்கறேன்.

டொக்.

ஏய் (மனைவியை), அம்மா கிட்டே பேசினேன், ஆமா, அதப் பேசாம படுத்துக்கிட்டு, பசிச்சா சாப்டுட்டு இருன்னு சொல்லிருக்கேன், ஆமா… ஆமா….சொல்லிட்டேன், ஆங், யாரு அங்கன பிக்கப் பண்ணுவாங்க அதன்னு சொல்லலையே! நீ ஃபோன வெய்யி மொத!

டொக்.

எம்மா, அங்கன ஃபோன் பண்ணிட்டேன், அவுங்க வந்து ஒன்னையக் கூப்புட்டுப்பாய்ங்க, செரியா?  – இதற்கு நடுவில் யாரோ சக-அலுவலகர் வந்து இவனுக்கு Hi சொல்கிறார் – இவன் பதிலுக்கு ‘Hi’ ….மறுபடி ஃபோனில்…. செரி செரி, ஆங், டாய்லெட் எல்லாம் நான் சொல்லலயே, ஓ! ஹாயா, அது இங்க ஆபிஸ்ல ஃப்ரெண்டு மா. வெக்கறேன்.

டொக்.
**************************
ஏய் (வீட்டம்மாவிடம்), என்ன, சாப்டியா?

என்னாது? நானா சொன்னேன், இங்க பாரு, ஏன் இப்படி பேசற?

என்ன இப்படி லூஸு மாதிரி பேஸ்ற?
…நீ இப்படி லூஸு மாதிரி பேசிட்ருந்தீன்னா என்ன பண்றதூஊ?

நீ ஃபோன மொத வெய்யி!

டொக்!
**************************
சற்று நேரம் கழித்து…

ஏய் இங்க்யாறு (இங்க பாரு என்பதை சுத்தமான தமிழில் இப்படிச் சொல்வார்கள்), நீ தானே லூஸு மாதிரி பேசின?

ஹாங், லூஸு கிட்ட வேற எப்படி பேச முடியுமா? ஏய், என்ன பேஸற நீய்யி? ஃபோன வெய்யி மொத சொல்றேன்…(இப்போ திருப்பி கூப்பிடுவானேன் மொத்துக்காப்பு வாங்குவானேன்?)
….
சரி வுடும்மா, வுடும்மா, நீ என்ன இப்படியெல்லாம் ஆரம்பிச்சுட்ட?

நீ அதெல்லாம் பேசாத, ஃபோன வெய்யி

(அலுவலகத்தின் மெலிதான ஏஸி சத்தம், இவன் குரல், தவிர அவ்வவ்போது பிறர் டைப் பண்ணும் ஓசை, இதைத் தவிர கனத்த மெளனம். இது ஒன்றே அத்தாட்சி, அனைவரும் இவன் பேசுவதில் ஒன்று இரிட்டேட் ஆகி இருக்கிறார்கள், அல்லது தமாஷாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு – மொழி புரியாவிடிலும் வெளக்கமாத்தடி விழும் போது புரிந்து கொள்ள மொழி என்ன வேண்டியிருக்குங்கறேன் மொழி? நான் மும்முரமாக நோட்ஸ் எடுத்துக் கொண்டிருந்தேன், அட இந்த ப்ளாக்குக்கு இல்லைங்க, வேலை விஷயமாத்தான்.)

டொக்!
**************************
இரண்டாவது முறை தலைவன் ஒரு வீடு வாங்க விழைகிறான். அதற்கான ஃபோன் கால்கள்…

ஹலோ மாமா, ஆங் சொல்லுங்க மாமா, பிசியா? டிஸ்டர்ப் பண்றேனா? இல்ல, இந்த இந்தியன் பேங்குன்னு சொன்னவன் இப்போ இந்தியன் புல்ஸுன்னு சொல்றான் மாமா, அது சரியா வருமா?

இல்ல ப்ரைவேட் தான் மாமா

சரி நேஷனல் பேங்க் ரேட்டு என்னன்னு (?!) கேட்டுட்டு சொல்றேன். சரி மாமா.

டொக்.
*************
ஹலோ, சார் நாந்தான்…மாமா ப்ரைவேட் வேண்டாங்கறாரு சார். ரத்தத்த உறிஞ்சிடுவாய்ங்கன்னு சொல்றாரு. நேஷனல் பேங்க்குன்னா ஓகேங்கறாரு.

இதோ வரேன் சார்.

டொக்.
***************
மாமா, நாந்தான், டிஸ்டர்ப் பண்றேன், சாரி, கோல்டு லோன்னா, ஒரு பெளனுக்கு எவ்ளோ? ஒரு 65 பவுன் வெச்சா?

வைக்கறதுல ப்ராப்ளம் இல்லையே? தேச்சுற மாட்டய்ங்களே? சின்ன அயிட்டம்னா அப்படியே எடுத்துக்கலாமா, ஒரு ஒன் இயர்ல? சரி.

டொக்.
***************
ஆமா சார், வாட் யு சே,  am not interested to go to private bank guys, only nationalized banks, வாட் யு சே, ப்ரைவேட் வேண்டாம் சார்…மூணு மாசம் ஆகுமா நேஷனல்னா? ஓ, சரி சரி, இதோ கூப்பிடுறேன் சார் மறுபடி…

டொக்.
********
மாமா, சாரி…கோல்டு லோனு ஒரு பவுனுக்கு பதினஞ்சாயிரம் தருவாய்ங்களாம்… பத்தாயிரம் ரூபாக்கு நூத்தி நாப்பது ரூவா வட்டி, ஆமா மாமா.

எங்கிட்ட அஞ்சு இருக்கு….அவகிட்ட ஒரு மூணு, மாமா நீங்க ஒரு பத்து, அம்மா ஒரு ஏழு தாரேன்னிச்சி, என் ஃப்ரெண்ட்ஸ் ஒரு ரெண்டு தரேங்கறாய்ங்க, ஆக மொத்தம் இருபத்தி ஏழு…ஆமா மாமா, இன்னம் பதிமூணு கொறையுது… (தம்பிகளா, தலைவன் சொல்ற ரெண்டும் ஏழும் லட்சங்கள் ஆமா), சரி மாமா…

டொக்.
*************
ஏய், நாந்தான். மாமா கிட்ட பேசுனேன், அவரு ப்ரைவேட் வேண்டாங்கறாரு..ஆமா, ஆமா, (மறுபடி எங்கிட்ட அஞ்சு உங்கிட்ட மூணு … எல்லாம் சொல்கிறான் அவளிடம்)

நீ என்ன பேஸுற? (அட ஆண்டவா, ஆரம்பிச்சாச்சா மறுபடி? என்னால எதிர்முனையில் இருக்கும் காரிகையை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை, பயமாயிருக்கிறது, கையில் என்ன வைத்திருப்பாளோ இவனுடன் பேசுகையில்)

நீ என்ன லூஸு மாதிரி பேஸற? உன் நகைய எங்க வெப்ப? யாரு, உங்கப்பா…ஹ! அவரு….சரி இதக் கேளு, நான் சொல்றத ஒரு நிமிஷம் காதுல வாங்கு…

நீ போட்ருக்க நகை கொஞ்சம் தான் இருக்கு, வெறும் முப்பதொன்பது பவுன் (அடப்பாவி, இது கொஞ்சமா?) அத வெச்சு என்ன செய்ய முடியூ…ன்?

ஏய் இந்தா பாரு, நீ ப்ரச்சினை பண்றா மாதிரியே பேசற என்ன?

ஆயிரம் இருந்தாலும் அது எங்கம்மா, அவங்களுக்கு அப்புறம் தான் எல்லாம் (நெஞ்சத் தொட்டுட்டான் பையன் நிஜமாவே, இவன் மேல எனக்கு ஒரு மதிப்பு இந்தத் தருணத்தில் வந்தது நிஜம், நிஜம்)

சரி வுடும்மா, சாரி மா (சரண்டர் யுவர் ஆனர்)

அட வுடும்மா, வுடுன்னு சொல்றேன்ல

Courtesy: http://www.rhinoafrica.com/blog/2011/03/08/i-am-woman-hear-me-roar-rhino-africa-salutes-the-women-of-the-world/

வுடும்மா…ப்ளீஸ்

(நொந்து நூலாகிப் போய்…)

டொக்!
*************
(அப்படியெல்லாம் லூஸ்ல வுட்ற முடியுமா? மறுபடி….)

ஏய், நான் சொல்றதக் கொஞ்சம் கேளு, சரியா…. சரின்னு சொல்லு.

(மறுபடி, சந்தைக்குப் போணும் ஆத்தா வையும் படிக்கவும். எங்கிட்ட அஞ்சு, உங்கிட்ட மூணு….)

என்னது?

ஹாங், என்ன?

உங்கப்பா டான்ஸ் ஆடுவாரா? (கொஞ்சம் மெள்ள) அத வெச்சு எவ்ளோ கிடைக்கும்?

ஆங், என் டப்பா டான்ஸ் ஆடிடுமா? நீ என்ன பேசற?

உங்கப்பா ‘எங்க குடும்பத்துலயே அந்த பழக்கம் கிடயாது’ன்னு சொல்லிட்டாரு…

சரி வுடும்மா

நீ என்னம்மா? வுடும்மா ப்ளீஸ்

அட வுடும்மா, சொல்றேன்ல?
(மேலே சிங்கம் படம் பார்த்துக் கொள்ளவும் மறுபடி)

நீ உங்கப்பா கிட்ட என்ன பேசுவியோ தெரியாது, அது உன் பாடு, நான் ball அ உன் கோர்ட்ல போட்டுட்டேன் (?!), அது உன் பாடு, நீ அவர்கிட்ட பேசிட்டு எனக்குச் சொல்லு. சரி வைக்கறேன்.

ப்ரைவேட்டா? அவைய்ங்க கிடக்குறாய்ங்க, எடுத்தா தானே ப்ரச்சினை? ஒரு நிமிஷம் இரு.

டொக்.
***************************************
டேய், நாந்தாண்டா

எனக்கு நீ ஒரு ஹெல்ப் பண்ணனும், கண்டிப்பா பண்ணறேன்னு சொல்லு (இது எப்டி இருக்கு)

எனக்கு ஒரு 3 லச்சம் வேணும், தரியா?

(எதிர் முனையில் இருப்பவன் சீட்டிலிருந்து விழுந்திருப்பான் கீழே)

டேய்..டேய்…கேள்றா! மறுபடி சந்தைக்குப் போணும், ஆத்தா வையும்….எங்கிட்ட அஞ்சு…மாமா கிட்ட பத்து…
இதுல பதிமூணுல மாமா இன்னொரு பத்து தாரேன்னு சொல்லிட்டாரு (அந்த மாமா யாருன்னு காட்டேன் கொஞ்சம், அவர கிழக்கால நிக்க வெச்சு கால்ல வுழலாம்)

சரி, ட்ரை பண்ணு….ஒகே?
***************************************
சஸ்பென்ஸ் தாங்க முடியலை, அதோட திருப்பி ஒரு ஃபோன் போட்டான், என்னடாவென்று பார்த்தால் கஸ்டமருக்கு, சம்பளம் வாங்கற வேலைக்காக. என்ன பண்ணினான் இந்த ரெண்டு நாளில் என்பது தெரியவில்லை. பிள்ளை வெகு சமர்த்து தான்.

டொக்.

Advertisements