Tags

, , , , , , , , , ,

என்னத்தடா எழுதறதுன்னு தலையைப் பிச்சுகிட்டு இருக்கும்போது, அதிலேயும் மிச்ச ப்ளாக்கர்களுக்கெல்லாம் மட்டும் விஷயம் எப்படிடா வந்துகிட்டே இருக்குதுன்னு தலைய பிச்சுப்போம் பாருங்க, அதுல கூட இன்னும் ரெண்டு முடி பிஞ்சு வரும். அப்படி ஒரு நாள்ல டுபுக்காரோட பதிவொண்ணைப் படிச்சா, அட, வாத்யார் நம்மளையும் கூப்பிடுறாரேன்னு ஒரே சந்தோஷம்.

பின்ன வுடுவோமா? ஸ்கூல்ல ஸ்போர்ட்ஸ் டேயில் பெரிய பசங்க ஓடின ரேஸ் ட்ராக்ல ஓடி, பொங்கல் திருவிழா முடிஞ்ச ஒடனே அதுக்குப் போட்ட ஸ்டேஜ்ல ஏறி ஆடி, ஏரோப்ளேன் பறக்கும்போது கீழ ஓடியே அதை முந்துவோமுல்ல. அதெல்லாம் போலத்தான்.

“டேய், அவரு பெரிய டுபுக்குடா, அவர் போடலாம் இந்த மாதிரி பதிவெல்லாம், உனக்கென்ன பெரிய டுபுக்குன்னு நினைப்போ, உன்னைய யாராச்சும் கூப்பிட்டாங்களா குறிப்பா’ என்று நீட்டி முழக்கினால் என் பதில்:

“நான் பெரிய டுபுக்கு இல்லைதான், ஆனா டுபுக்கே என்னைக் கூப்பிட்டிருக்காரே”

“டேய் அது ஒரு இதுக்காக, மரியாதைக்காக சொல்றது, ஒடனே உள்ளார பூந்துடுவீங்களே, அவரு உனக்காக மட்டுமா சொன்னாரு தனியா?”

“சர்த்தான் உன் பேச்சு சேப்பில்லை போடா, அவனவன் எழுத ஒண்ணும் கிடைக்காம அல்லாடறான்”!!

இனி கேள்வி-பதில்:

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

வயதெல்லாம் நியாபகமில்லை, ஆனால் முரட்டுக்காளை தான் முதல் படம் என்று நினைக்கிறேன். அதைப் பார்த்துவிட்டு “முன்னால சீறுது மயிலக் காள, பின்னால பாயுது மச்சக் காள” என்று பாடிக்கொண்டே இருந்தது நினைவிருக்கிறது. அதில் வரும் சண்டைகளை வீட்டு டேபிளிலிருந்து பாய்ந்து பாய்ந்து ட்யுஃப், ட்யுஃப் என்று சவுண்டு குடுத்துக் கொண்டே தம்பியிடம் போட்டதில் வீட்டில் மற்ற அனைவரும் வில்லன்களாகி என்னைப் போட்டுத் துவைத்து விட்டார்கள். படத்துக்கு கூட்டிப் போன மாமா மட்டும் சிரி சிரியென்று சிரித்துக் கொண்டிருந்தார்.

ஆனால் சினிமா ஒரு மயக்கும் வஸ்து என்பதை மிகச்சிறிய வயதிலேயே கண்டிருக்கிறேன். தம்பிக்கு எந்த ஊரு பார்த்து விட்டு ‘நான் ரஜினி ஃபேன்’ என்பேன். சில நாள் கழித்து ஏதாவது கமல் படம் பார்ப்பேன். பின் ‘கமல் தான் சூப்பர்’ என்பேன். அக்கா ‘என்னடா, இப்போ யார் ஃபேன் நீ?’ என்பார்.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

அந்நியன். அரங்கில் அல்ல, தரையில் பெட்ஷீட் போட்டு டிரைவ்-இன்னில் பார்த்தேன். சை…இந்த மாதிரி ஒருத்தன் வர மாட்டேங்கறானே நாட்டைத் திருத்தன்னு இருந்தது, சரி நாமளே கிளம்பிப் போகலாம்னா ஒரே ஒரு ப்ராப்ளம் தான். நமக்கு அந்த மாதிரி சுருள் சுருளா சடை முடி இல்லை, அது மட்டும் இருந்திருந்தா இன்னேரம் இந்தியா வல்லரசாயிருக்கும்….ஹும்!

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

“மொழி” தான் டக்கென்று நினைவிற்கு வருகிறது. ஒரு தீபாவளி அன்று டிவியில் பார்த்தேன். தமிழ் சினிமாவின் மீது மிகுந்த நம்பிக்கையை (மறுபடியும்) ஏற்படுத்திய படம், மிகுந்த ஆறுதலைத் தந்த படம் என்றும் சொல்வேன். அதே போல “அழகிய தீயே”வும் மிகப் பிடித்தது. கச்சா முச்சாவென்று நாக்கைத் துறுத்திக் கொண்டு ஆடுவது, அரிவாளுடன் ஓடுவது, ஸ்கார்ப்பியோ, சுமோக்களை பத்த வைத்துத் தூக்கி அடிப்பது, தாடி வைத்துக் கொண்டு பொறுக்கி மாதிரி திரிபவர்களைக் கதாநாயகர்களாக்கி அவர்களின் பொறுக்கித்தனங்களைக் காவியம் போலக் காட்டுவது போன்ற படங்களுக்கு நடுவில் வந்த பெரிய்ய்ய ஆறுதல் இப்படங்கள்.

என்ன பழசா இருக்கேன்னு பாக்கறீங்களா, படமே பாக்கறதில்லீங்க, நேரமும் இல்லை, முக்கியமா பொறுமையும் இல்லை. அதையும் மீறி வரும் நல்ல படங்களை கண்டிப்பா நல்ல முறையில் (திருட்டு வி.சி.டியில் பார்ப்பது இல்லை) பார்த்துட்டுச் சொல்றேன்.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச் சினிமா?

அமரன், உழைப்பாளி, ம்ம்ம், பாட்ஷா, வெற்றி விழா… தியேட்டர்ல டிக்கெட் வாங்கறதுக்குள்ள தாக்கு தாக்குன்னு தாக்கி வுட்டாங்க நம்மளை, ஓ…இது ஃபீலிங்ஸ் தாக்கா? இது ரொம்ப கஷ்டமப்பா பதில் சொல்றது, எங்க ஸ்கூல் வாத்தியார் மாதிரியே கஷ்டமாக் கேள்வி கேக்கறீங்களே, சரி முயற்சி பண்ணறேன்.

சலங்கை ஒலி, இதயத்தைத் திருடாதே,  குருதிப்புனல், மாயாபஜார், மாயக்  குதிரை (அந்த ராக்ஷஸிகளைக் கண்டு பயந்து சைக்கலாஜிக்கலி ஒரு பேய் பயம் தொற்றிக் கொண்டு விட்டது), இருபத்தி மூன்றாம் புலிகேசி…ஹ்ம்ம், நிறைய உண்டு ஆனால் இப்போதைக்கு இவ்வளவு தான் ஞாபகம் வருகிறது.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

கேள்வியே புரியலை, ஸோ, டுபுக்கோட பதிவை பிட் அடிச்சுட்டு, திருப்பி வரேன். அவர் சொன்ன அதே மாதிரி சினிமாவிலுள்ள சிலர் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். ப்ராக்ஸி மாதிரி இவர்கள் வேலை செய்ய, க்ரெடிட் வேறொருவருக்கு.

ஆனால் சினிமா மீடியாவை வைத்துக் கொண்டு எம்.ஜி.ஆர் அவர்கள் மக்கள் மனதில் ஏற்படுத்திய தாக்கம் தான் டாப். கிராமங்களில் இன்றளவிலும் அவர் உயிருடன் இருக்கிறாரென்று நம்புபவர்கள் உண்டு. இதன் சைட் எஃபக்ட் இன்றளவிலும் நடிகர்களுக்கு ‘நாமும் முதல்வர் ஆகலாம்’ என்ற (சில சமயம் விபரீதமான) எண்ணத்தைத் தோற்றுவித்ததும் அதுவே.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா – தொழில்நுட்ப சம்பவம்?

இந்த ‘சொன்னது நீ தானா’ பாட்டு வருமே நெஞ்சில் ஓர் ஆலயம்  படத்தில். அந்தப் பாட்டிலே கேமரா ஒரு தொடர்ச்சியான ஷாட்டில் ரூமுக்குள் நுழைந்து கட்டிலுக்கு அடியில் போய் அப்படியே இந்தப் பக்கமாய் வெளியே வந்து திரும்பி தேவிகாவின் முகத்தை ஜூம் செய்யும். இதைப் பெரும்பாலும் பாட்டு, அந்தக் காட்சி இவை டாமினேட் செய்து விடும், கவனித்துப் பார்க்க வேண்டும்.  இதை எப்படி எடுத்தார்கள் என்பது இது வரை எனக்குத் தெரியவில்லை. க்ரேன் வைத்தாலும் கேமரா ஆட்டோமேட்டிக்காக இருக்க வாய்ப்பில்லை அத்துணை பழைய படத்தில். இது ஒரு அற்புதம். மற்றபடி மாயாபஜாரில் அபிமன்யு ரதத்தில் செல்கையில் திடீரென்று முன்னால் தோன்றும் சுவர் இதெல்லாம். மன்னிக்கவும், புதிய படங்களின் அனிமேஷன் எல்லாம் ரொம்ப மனதில் பதியவில்லை. நுடுல்ஸுக்காக ஒரு புழு மாதிரி இருக்கும் வஸ்துவுடன் சாய்னா நெய்வால் கை தட்டுவது மாதிரி அனிமேஷன் கவர்வதில்லை (நான் ஈ படத்தில் அனிமேஷன் ரொம்ப நன்றாயிருப்பதாய்க் கேள்விப்பட்டேன்). தீந்தமிழில் நல்ல அனிமேஷன் படங்கள் எடுங்களேன் யாராவது. இந்த வெட்டுக்கிளி நடப்பது போல வெட்டு வெட்டென்று கார்ட்டூனை நடக்க வைத்துப் படுத்தாமல் நல்ல தொழில்நுட்பத்தில் அழகாக எடுத்தால் சூப்பராக இருக்கும். கார்ஸ், டாய் ஸ்டோரி, ஹாரி பாட்டர், அவதார், லார்ட் ஆஃப் த ரிங்க்ஸ் எல்லாம் எப்படி இருக்கு பாருங்கள்! கோச்சடையானை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன், ஆனால் இவர்கள் அடிக்கும் பப்ளிசிட்டி ஸ்டண்டைப் பார்த்தால் ஒரு மாதிரி சந்தேகம் வருகிறது.

மற்றபடி ரொம்ப டெக்னிக்கலாகவெல்லாம் தெரியாது.

6. தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

எப்போதாவது வாசிப்பது உண்டு. அதிலும் இப்போ வரும் சினிமா இண்டெர்வியு எல்லாம் படிப்பதே இல்லை. அவை வெறும் ப்ரோமோ, விளம்பரம் தான். இந்த படத்தில் ஒரு பாய்ச்சல் இருக்கும், வேறெதிலும் இதைப் பார்த்திருக்க முடியாதுன்னு பேசிக்கிட்டே இருக்காங்க (படம் தியேட்டரை விட்டு ஒரே பாய்ச்சலா ஓடறதைச் சொல்றாங்க போல). இதனால் ஒரு வித்தியாசமான நகைச்சுவைப் என்னவென்று கேட்டால், படம் வந்து ஊத்தி மூடினப்பறம் இதன் இண்டெர்வியூவைப் படித்துப் பார்ப்பேன். இதுக்காடா இவ்வளவு பில்டப்புன்னு சிரிப்பா வரும். ஆனா அவர்களோட முயற்சியையோ ஆர்வத்தையோ குறை சொல்ல வரவில்லை. ஆனால் இயக்குநர் எடுக்க நினைப்பதற்கும் ரிசல்டிற்கும் எல்லாத்துக்கும் மேல மக்கள் அதை எப்படி பெர்சீவ்-ரிசீவ் செய்கிறார்கள் என்பதற்கும் எங்கையோ ஒரு கேப் இருக்கு என்று ஒரு நினைப்பு ரொம்ப நாளா உண்டு. அதே சமயம் சில மொக்கைப் படங்களைப் பார்த்தபின் இந்தக் காலத்திலேயும் எப்படி இப்படியெல்லாம் கொத்தற கதையை படமா எடுக்கறாங்க எனும் வியப்பும் வரும்.

ஒரு மிகப் பிரபல இயக்குநர் ஒருவர் தன் படத்துக்கு தம் பையனையே கதாநாயகனாப் போட்டு ரொம்ப ஓவரா இப்படித்தான் பிட்டைப் போட்டிருந்தார் விகடனில். . அதில் அவர் சொன்னது இது தான்:

“காதலை இந்த மாதிரி இது வரை யாருமே காட்டினதே இல்லை, தமிழ் சினிமாவில் இது ஒரு மைல் கல்”

“பையன் சாதாரண ஆளா இருக்கான்னு நினைக்காதீங்க, அவன் கிட்ட ஒரு ஃபயர் இருக்கு”

படம் வந்து ஊத்தோ ஊத்தென்று ஊத்தி, என் ஃப்ரெண்டுகிட்ட இவர் மேற்சொன்ன ஃபயர் வாக்கியத்தைப் பற்றி சொல்கையில் அவர் சொன்னார்:

“ஃபயர் இருக்கறது உண்மைதான், அதான் அப்பன் கையச் சுட்டுக்கிட்டான்”!

7. தமிழ்ச்சினிமா இசை?

இளையராஜா, எஸ்.பி.பி, மோகன் இந்த ட்ரை ஸ்டார்கள் இல்லாத என் சிறு வயதை நினைத்தால் பயமாகவும் வெற்றிடமாகவும் தெரிகிறது. நிறைய பாடல் வரிகள் எந்தவொரு முயற்சியும் செய்யாமலே அப்படியே மனப்பாடம் ஆகிவிட்டது. இது பலருக்கும் நேர்ந்திருக்கலாம்.  நான்கு வயதிலேயே என்னை ‘என் கண்மணி, என் காதலி’ பாடலைப் பாடச் சொல்லி வீட்டருகில் இருப்பவர்கள் கேட்பார்களாம். என் சித்தி சொல்லியிருக்கிறார் ‘எங்களுக்கெல்லாம் பெருமையா இருக்கும்டா’ என்று. அப்படி தமிழ் திரை இசைப் பாடல்களுடனேயே வளர்ந்த பாக்கியம் செய்தவன் நான்.

மிக மிக அற்புதம் என்றே சொல்ல வேண்டும். காலம் கடந்து நிற்கும் இன்றும் எவர்-க்ரீன் பாடல்கள் பலப் பல உண்டு. “என்றென்றும் ராஜா” பார்த்தீர்கள் தானே, அதில் பார்வையாளர்கள் ஏதோ தாங்களே கம்போஸ் செய்த பாடல்களை மேடையில் பாடுவது போல, தங்கள் வாழ்வில் ஒன்றிய பாடல்களைக் கேட்டு மெய்மறந்திருந்ததை! அப்படியெல்லாம் இப்போ வர மாட்டேங்குதே பாட்டு?!  இது தவிர பழைய பாடல்கள் பலவும் இப்போதைய புதிய படங்களில் குறிப்பிட்ட சில பாட்டுக்களும் பிடிக்கும்.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

இரண்டு பெங்காலி படங்கள் பார்த்தேன். பேரெல்லாம் நியாபகம் இல்லை. ஒன்றில் ஒரு பெண் தீவிரவாதி ஒரு அரசியல் தலைவரைக் கொலை செய்ய முனைவாள். ஆனால் தான் கர்ப்பமாய் இருப்பது தெரிய ஆரம்பித்தவுடன், அந்த சிசு என்ன செய்யும் என்றெல்லாம் தாயுள்ளம் கொண்டு மனித வெடிகுண்டாய் தான் செயலாற்ற இருக்கும் அந்த கடைசி நொடியில் மனதை மாற்றிக் கொண்டு விடுவாள். அவள் தங்கியிருக்கும் ஒரு வயசானவர் குடும்பம் அவளின் மன மாற்றத்திற்கு எப்படி மறைமுக காரணமாய் அமைகிறது என்பதை அழகாகச் சொல்லியிருப்பார்கள்.

இரண்டாவதில் ஒரு கிராமியச் சிறுவனுக்கு கண்ணில் புற்று நோய் வந்து கண்களையே எடுக்க வேண்டுமென்ற நிலையில் அவன் தாத்தாவும் மாமாவும் அவனை கொல்கத்தா  பெரியாஸ்பத்திரிக்கு அழைத்து வருவார்கள். ஆபரேஷனுக்கு முந்தின நாள் இரவு தாத்தாவும் பேரனும் காணாமல் போய் விடுவார்கள். பதறிப் போய் எல்லாரும் தேடுகையில் தாத்தா பேரனைத் தூக்கிக் கொண்டு வருவார் உள்ளே. டாக்டர் அவரை கத்தோ கத்தென்று கத்தியவுடன் மெள்ள ‘இவன் நாளைக்கு கண்ணில்லாம ஆயிடுவான், அதனால கடைசியா ஒரு முறை உலகத்தை நல்லாக் காட்டலாமேன்னு வெளியே கூட்டிப் போய் வந்தேன்’ என்பார். கண்ணீர் வந்து விடும். என்னை மிக பாதித்த படம் இது. டி.டி. நேஷனல் சேனலில் சப்-டைட்டிலுடன் பார்த்தேன். பாட்டெல்லாம் கிடையாது. பாத்திரங்கள் அத்தனை தத்ரூபமாய் இருக்கும். சொல்ல மறந்தேனே, ஆபரேஷன் ஆன பின்பும் அப்பையன் ஒரு குழந்தை, தன் குறும்பு, விளையாட்டுத்தனம் எல்லாத்தையும் அப்படியே வைத்திருப்பான் என்பதை –  தவிப்பு, வருத்தம், மகிழ்ச்சி எல்லாக் கலவையையும் காட்டி அக்கரையில் நின்றிருக்கும் தன் தாயிடம் திரும்பிச் செல்ல பரிசலில் கருப்புக் கண்ணாடி அணிந்தபடி அமர்ந்துள்ள சிறுவன் தண்ணீரை படபடவென்று தட்டுகையில் காட்டி விடுவார் இயக்குநர். அற்புதமான படம்.

இது தவிர ஊர்ப்பட்ட ஆங்கிலப் படங்களைப் பார்த்திருக்கிறேன். ட்ரெயிலரில் பார்த்தது தவிர நிறைய உண்டு. சப் டைட்டில் இருந்தால் போதும், யாதும் ஊரே, யாவரும் கேளிர் தான்.

ஆனா என்னிடம் உள்ள ஒரு நல்ல குணம்(?!) என்று என் நண்பன் சொல்வது “எப்படிடா இந்தக் கொத்துப் படத்தையெல்லாம் பொறுமையா ஒக்காந்து கடைசி வரை பாக்கற?” என்பது தான். எப்படிப் படமாயிருந்தாலும் பார்த்து விடுவேன். இதில் டிஸ்டர்ப் செய்து விட்டால் செம கடுப்பாகி விடுவார் ஐயா. “உங்கப்பாவிற்கு சினிமா பார்க்க ஆரம்பிச்சா ஒலகமே தெரியாது, நீ வாடா” என்று வீட்டம்மணி பாராட்டும் அளவிற்கு ஃபோகஸ் உண்டு. இதில் யாரானும் ஸ்க்ரீனுக்குக் குறுக்கே போனால்லாம் அவ்வளவு தான். நம்மூரில் படம் முடியும் முன்பே பெரிய இவன்களாட்டம் சீட்லேர்ந்து எழுந்து வெளியே செல்பவர்களைப் பிடிக்கவே பிடிக்காது. இதுக்காக முன்ன்னாடி சீட்டிலே போயி உட்கார்ந்தா ஹீரோ, ஹீரோயின் மூஞ்சியெல்லாம் ரொம்ப பக்கத்தில் வந்து பாடாய் படுத்தி விடும்.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

ஆ! என்ன இப்படிக் கேட்டுப்புட்டீங்க, எனக்கு எம்.ஜி.ஆரைத் தெரியும், சிவாஜியைத் தெரியும், ரஜினி, கமல் எல்லாரையும் நல்லாத் தெரியுமே. நல்லா கேக்குறாய்ங்க டீட்டெயிலு!

ஒரு (வருங்கால) இயக்குநருடன் ஒரே பெஞ்சியில் அமர்ந்து சில்லி பரோட்டா சாப்பிட்டவன் என்ற முறையில் தமிழ் சினிமா உலகுடன் நேரடி தொடர்பு உண்டு. தமிழ் சினிமா மேம்பட அது நிச்சயம் உதவும். காத்திருங்கள்!

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஆஹா அதுக்கென்ன, பிரமாதம் தான். இதுல நான் நினைக்கறது என்ன இருக்கு? இன்னும் அடிதடி, பொறுக்கி ஹீரோ கதைக் களத்தை விட்டு வெளியே வந்து நகைச்சுவை, மெல்லிய உணர்களைப் பிரதிபலிக்கும் படங்கள் எல்லாம் நிறைய எடுக்க வேண்டும்.

தமிழ் சினிமா என்றாலே நாலு பாட்டு, ஒரு குத்தாட்டம், அடிதடி, ஹீரோ ஊர் மக்கள் நடுவுல இங்கையும் அங்கையுமா பாடிட்டே நடக்கறது, பால் காச்சினாத் தான் காஃபி குடிக்க முடியும், ஆனா காப்பியைக் காச்சி பால் குடுக்க முடியாது போன்ற தத்துவார்த்தம் மிக்க, சுயபுகழ் பாடும் புளித்த பாடல்கள், எறும்புப் புத்தில் காலை வைத்தாற்போலே குதித்து டான்ஸ் என்று அதை விளிப்பது, ஃப்ரேமில் நாலு பேர் வரிசையாக நின்று கொண்டு ஒருவர் வசனம் பேச மற்றவர் தலையைத் தலையை ஆட்டும் கண்றாவி – இந்த பாழாப் போன ஃப்ரேம்வொர்க்கிலிருந்து வெளியே வந்து எதார்த்தமாக எடுத்தல் நலம். அது இரண்டரை மணி நேரம் தான் ஓட வேண்டுமென்பதெல்லாம் கூட இல்லை. நம்ம கிட்ட ஊர்ப்பட்ட திறமையான ஆட்கள் உண்டு. ஜமாயுங்க ப்ளீஸ்!

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

ஒண்ணும் குடி முழுகிப் போயிடாது என்றே நினைக்கிறேன். அந்த மாதிரி ஒன்று நடந்தா தமிழர்கள் கொஞ்சம் உருப்படியான வேலைகள் செய்வதில் முனைவார்கள் என்று சற்று கோபமாகவும் தோன்றுகிறது. இதில் படத்தை படமாக, பொழுது போக்காக மட்டும் பார்ப்பவர்கள் விலக்கு. மாறாக, கட் அவுட் வைக்கிறேன், காவடி எடுக்கிறேன் என்றெல்லாம் பித்தலாட்டம் செய்பவர்கள் கஷ்டப்படலாம்.  ஆனா பாதிக்கு மேற்பட்ட பத்திரிக்கைகளுக்கு போடறதுக்கு விஷயமே இருக்காது, ரசத்துக்கு அரைக்கும் பொழுதுன்னு, மருதாணி இட்டு கை சிகப்பானால் என்று  ட்ராக் மாறினாலும் மாறி விடுவார்கள். ஆனால் சினிமாவை பிழைப்பிற்கு நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாடு திண்டாட்டம் ஆகி விடும், அதனால் இது (அவர்களுக்காக மட்டும்) நிற்கவெல்லாம் கூடாது.

ஆனால் இதே கேள்வியைக் தமிழ் சினிமா என்பதற்கு பதிலாக கிரிக்கெட் என்று போட்டீர்களேயானால் 100% ஆதரவு கொடுப்பேன். அதிலும் டிவி ஷோரூம் முன்னால் தெருவில் நின்று பார்ப்பது, பால்-பை-பால் பார்ப்பது, ஆபிஸுக்கு லீவு போட்டுப் பார்ப்பது அல்லது அங்கே கேண்டீனே கதியாக் கிடந்து பார்ப்பது  போன்ற தேச துரோகச் செயல்களைச் செய்பவர்களுக்கு அன்றைய தினம் ஃபைன் மற்றும் 100% இன்கம்-டாக்ஸ் போட வேண்டும் என்பது!

 இச்சங்கிலியைத் தொடர நான் அழைக்க நினைக்கும் நபர்  – அரவிந்த் யுவராஜ்,

மாப்ளே, வா, இந்த சங்கிலியைக் கொஞ்சம் புடி, நீ நிறைய சொல்வ விவரமா. ஆனா நான் உன்னையக் கூட்டிட்டுப் போன கொத்து இந்திப் படம் பத்தியெல்லாம் மூச்சு விடக் கூடாது சொல்லிப்புட்டேன். இது தமிழ் சினிமா பத்திய பதிவு. அந்த லைனுக்குள்ளயே பேச்சு பேச்சா இருக்கணும். ஆமா!

Advertisements