Tags

, , , , , , , , , ,

ஹிந்திப் படங்கள் நம்மை நன்கு பாதித்திருக்கின்றன, சந்தேகமில்லாமல். அது அக்கால ரஃபி, லதா, கிஷோர் போன்றவர்களின் மெலடிப் பாட்டுக்கள் அடங்கிய படங்களாகட்டும், பப்பி லெஹரியின் இசையாகட்டும், நம்ம எஸ்.பி.பி போய்க் கலக்கின ஹிந்திப் பாடல்களாகட்டும், குமார் ஷானு, உதித் நாராயண், அனுராதா பெளட்வால் என்று பலரும் தொடங்கி இன்றைய ஷ்ரியா கோஷல் வரைக்கும், சூப்பர்தான். கட்டி பதங்கு கட்டி பதங்கு என்று பெரியவர்கள் உருகுவார்கள் வீட்டில், அதென்ன கட்டி வந்த பதங்குவென்று யோசித்தால் பின்னர் கடீ பதங்க், அறுந்த பட்டம் என்ற பெயர்க்காரணம் தெரிந்தது. ஆராதனா பித்து பிடித்து அலைந்தவர்கள் ஏராளம் ஏராளம். ராஜேஷ் கன்னாவையோ ஷஷி கபூரையோ சிகப்பு கலர் ட்ரெஸ் போடக்கூடாதென்று கவர்மெண்டே ஆர்டர் போட்டிருந்ததாம், எல்லாரும் பைத்தியமாகி அலைகிறார்கள் என்று.

அவர்களைப் பார்த்து நாம் மீசையை வழித்தது மாறி இப்போது நம்மைப் பார்த்து அவர்கள் மீசை வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். பாலிவுட்டை பாலிம்பாக்கம் அல்லது பாடம்பாக்கம் என்று பெயர் மாற்றம் செய்யலாமே.

இதில் உலக மகா கொத்துப் படங்களும் உண்டு என்பதையும் சொல்ல வேண்டும். அதிலும் சிலதை ரசனையுடன் இரண்டு முறை பார்க்கவும் செய்திருக்கிறேன் (உ.ம். ஃபூல் அவுர் காண்ட்டே). இதை இரண்டாம் முறை நீளகண்டனை அழைத்துச் செல்கையில் அவனுக்குத் தலைவலி வந்து விட்டது. “நெஜமாவே ரெண்டாவது தடவையாடா பார்க்கறே?” என்று திகிலுடன் கேட்டான். அதை சில காலம் முன்னர் டிவியில் லேசாகப் பார்த்த போது என்னை நானே “எப்படிப்பட்ட படமெல்லாம் தியேட்டர்ல போயி பாத்திருக்காய், என்ன டேஸ்டுடா உனக்கு” என்று நினைத்துக் கொண்டேன். அதை முதன்முறை பார்க்கையில் அஜய் தேவ்கனுக்கு பல்லே கிடையாதோ என்ற டவுட்டு. அப்புறம் அவர் ஒரு பாட்டில் சிரித்து வைத்து வயிற்றில் பாலை வார்த்தார்.

ஹம் ஆப்கே ஹைங் கோன் என்ற படத்தை ஒரு பத்து முறை பார்த்திருப்பேன். இதில் எனக்காக பார்த்தது 3 4 முறை போக மிச்ச சொச்சமெல்லாம் மொழி பெயர்ப்பாளர் சேவைதான். இதில் தேர்தல் டூட்டி பார்க்கப் போவோர் போல சினிமா டிக்கெட் காசெல்லாம் போட்டுக் கூட்டிப் போவார்கள் நண்பர்கள் என்று எழுத ரொம்ப ஆசையாய் இருக்கிறது, ஹும், கஞ்சப் பிசினாரிகள், அப்படி ஓரிரு முறைதான் செய்தார்கள்.  தட் தட் மேன் தட் தட் மணி என்பது போல,  கைகாசைப் போட்டு மொழிபெயர்ப்பாளர் சேவை, யோகக்ஷேமம் வஹாம்யஹம்னு சொல்லியிருக்காரே கிச்சு? அவர் பாத்துப்பார்.

இந்தப் படத்தில் ஒரு காட்சியில் மாதுரி சல்மானிடம் ‘ஹம் ஆப் கே ஹைங் கோன்’ என்பார். இதுக்கு உலக மகா முழிபெயர்ப்பு செய்து புல்லரிக்கை வைத்தான் நண்பன். அதாவது  ‘நம்ம இப்ப நடிச்சிட்டு இருக்கற படத்துக்குப் பேர் என்னன்னு மாதுரி கேட்டாளாம், அதுக்கு சல்மான் ‘ஹம் ஆம் கே ஹைங் கோன்’ என்று சொல்றாராம். இதைச் சொல்லிட்டு ‘என்ன சரிதானே மாப்ளே?’ என்று  குசும்புச் சிரிப்போடு நம்மளையும் இழுத்து விட்டான்கள். “நான் உங்களுக்கு என்ன வேணும்”னு கேக்கறாடான்னு அர்த்தம் சொன்னா, மனோஜித் மாதுரி ராய் – மாதுரி தீக்ஷித் பித்து, பேர இப்படித்தான் சொல்வான் – தேவர் மகன் சிவாஜி ஸ்டைலில் “நீ என்னக் கேளு ராசாத்தி அந்தக் கேள்விய, அவனப் (சல்மான்) போயி கேக்கறியே? என்றான். உடனே ப்ரேம் “டஃபி வேணும்னா உன்னைப் பார்த்து அப்படிக் கேக்கும்” என்றான். டஃபி என்பது அந்தப் படத்தில் வரும் நாயின் பெயர். இப்படம் வந்த பிறகு நாங்களெலாம் ரஃபியை டஃபி என்று கூப்பிட்டு கடுப்பேத்தினோம்.

இவர்களை வைத்துக் கொண்டு இந்திப் படங்களுக்குச் செல்ல வேண்டுமென்றால் முதலிலேயே நான் ஒருமுறை தனியாகப் படம் பார்த்து விட வேண்டும். இல்லையென்றால் கதையெல்லாம் கவனிக்க முடியாது, ஒரே லந்து மயமாயிருக்கும். கேலி செய்து சீரியஸ்னெஸ்ஸை புஸ்ஸென்று ஆக்கி சிரிக்க வைத்து விடுவார்கள்.

******************************************************************

ஷாரூக்கானின் டர் (Darr) படத்திற்குப் போய் படம் தொடங்க இருக்கையில்…ஒரே அமைதி, இருட்டு. புதுப் படம் வேறயா, எல்லாரும் ஒரு எதிர்ப்பார்ப்போட இருக்கிறார்கள். அப்போது:

கோவிந்து: மாப்ள, அது என்னா மாப்ள, டர்ரு புர்ருன்னெல்லாம் படத்துக்கு பேரு வெச்சுருக்காய்ங்க?

சாம்: அதாண்டா, நம்ம சொல்றோமுல்ல, டர்ராயிடுவேன், டர்ரக் கெளப்பறாண்டான்னு, அதான் டர், பயம்னு அர்த்தம்.

ப்ரேம்: இல்லடா, இந்த மூணு பேருல ஒருத்தருக்கு (சன்னி தியோல், ஷாரூக்கான், ஜூஹி சாவ்லா) வயிறு சரியில்லை. அது யாரு, அதுக்கு யாரு காரணம்ன்ற சஸ்பென்ஸ க்ளைமாக்ஸ்ல தான் ஒடைக்கிறாங்க, அதான் டர்ர்ர்ர்ர்!!!!

நாங்கள் மட்டுமல்ல, சுற்றி இருப்பவர்கள் அனைவரும் பயங்கரமாக சிரிக்க ஆரம்பித்து, வந்திருந்த நேட்டிவ் ஹிந்திக்காரர்களுக்கு அர்த்தம் புரியாமல் மஹா எரிச்சலாகி விட்டது, என்னடா இப்படி ஒரு சீரியஸான படத்திற்கு இப்படி சிரிப்பாவென்று.

******************************************************************

பாரத் எலக்ட்ரானிக்ஸ் ஷாந்தி  – யேய், ஒனக்குத்தான் ஹிந்திப் படம் பிடிக்குமே, ஒரு படம் வந்திருக்கு புதுசா…”தில் டு பாகல் ஹை”

நான் – ஆமா, மெட்ராஸ் டு பாண்டிச்சேரி வந்தாச்சு, இப்போ தில் டு பாகல் ஹை வந்திருக்கு, அப்புறம் பாரத் எலக்ட்ரானிக்ஸ் டு கிண்டி, கிண்டி டு சைதை எல்லாம் வெயிட்டிங், உன் தலை! – அது தில் தோ பாகல் ஹை!

ஷாந்தி – அது என்னவோ யாரு கண்டா இங்கிலீஷ்ல எழுதியிருக்கு, பிடிக்குமேன்னு சொன்னேன். கேலியப் பாரு! சரி, அப்படீன்னா என்ன?

நான் – பைத்தியக்கார மனசுன்னு வெச்சுக்கலாம், மனசு பைத்தியமா இருக்கேன்னும் சொல்லலாம்.

ஷாந்தி – இதுக்கு நான் சொன்ன டைட்டிலே பரவாயில்லை.

******************************************************************

இதில் புரிகிறதோ இல்லையோ, சரியான வார்த்தைகளோ இல்லையோ, பாட்டுப் பாடி, பேசி எல்லாம் செய்வார்கள். இதில் சில முத்துக்களைப் பாருங்கள்:

செல்லப்பா: (காலேஜ் கிரிக்கெட் டோர்னமெண்டில் கமெண்டேட்டராக மைக்கை எடுத்துக் கொண்டு)

அஹா, பால் ஜாதா ஹை, ப்ரேம் பந்தை நன்கு விளாசி விட்டார், பஹுத் அச்சா பஹுத் அச்சா, படிக்கிறாரோ இல்லையோ நன்கு அடிக்கிறார்! பந்து வெகுதூரம் போய் விட்டது, ப்ரேம் ரன் ஓடுகிறார், இதோ கருக்குவேல் பந்தை எறிகிறார்,  ஹம் ஆப்கே ஐயோ அம்மா! குச்சி பணால்! அவுட்டா, இல்லையா? அம்பயர் சாப், ப்ரேம் அவுட் ஹை? ஜல்தி போலோ, தில்வாலே டண்டணக்கா ஹோ ஜாயேங்கே, ஜல்தி ஜல்தி…!

இப்படிக் காட்டுக் கத்தலில் மைக்கில் அலறினால் எப்படி இருக்கும் யோசித்துப் பாருங்கள். பவுண்டரி அருகில் ஃபீல்டிங் இருப்பவர்கள் கல்லை எடுத்து கமெண்டேட்டரைப் பார்த்து எறிய ஆரம்பித்த பின்தான் ஓரளவுக்கு அடங்கியது கமெண்டரி. பின்னரும் அவ்வவ்போது..”சாரா ஷெஹர் முஜே லாயின் கே நாம் சே ஜாந்தா ஹை” என்று கூவல் கேட்டுக் கொண்டிருந்தது. ப்ரின்ஸி பின்னர் கிரிக்கெட்டை விட கமெண்டரி நன்றாக இருந்ததென்று சொன்னார்.

******************************************************************

வெங்கடேஷ் பாபு: பாஸிகர் படத்தில் வரும் கிதாபேன் பஹுத் சி (கீதா பேன் என்று படித்துத் தொலைக்காதீர்கள்) பாடலை…

“கிதாபேன் ஏ குக்குபர்
படி ஹோகி புக்குபர்
ஏ க்யா க்யா ஏ க்யா க்யா
ஏ க்யா க்யா ஏ க்யா க்யா” – என்று பாடி விட்டு அதே நாகேஷ் ஸ்டைல் டான்ஸையும் ஆடி எங்களை ஓரக்கண்ணில் ஸ்டைலாக ஒரு பார்வை வேறு பார்ப்பான். ஹிந்திப் பாட்டு மாப்ளே, புரியலையா என்று கேள்வி வேறு.

******************************************************************

தேசிய ஒருமைக்கான பாட்டு மிலே சுரு மேரா துமாரா வில் வருமே:

படே சோர் ஜோ தாரோ மாரோ
படே ஆப்பனோ சூரு நிராலோ

அதாவது தாறு மாறா எங்கிட்ட ஏதும் வம்பு வெச்சிக்கிட்ட, சூடு போட்டு, ஆப்பு வெச்சிடுவேன்னு சொல்றாங்க, இல்ல?!!
******************************************************************

Advertisements