Tags

, , , , , , , , , ,

காக்கடா துணை                                                                       மடிக்கோல் துணை 

                                                                  

நிகழும் ஏதோ ஒரு வருடம் பிப்ரவரி மாதம் 31ஆம் தேதி மண்டை காய வைக்கும் மதுரை வெயிலில் பழங்காநத்தத்தில் வசிப்பதாய் ஃபிலிம் காட்டிக் கொண்டிருக்கும் வீட்டின் உரிமையாளர் (1ஆவது பார்ட்டி) மற்றும் ஆத்திகுளம் அருகே ‘பாரட வர்ஷே பரடக் கண்டே’ என்றும் அய்ங் அய்ங் என்று வாயை சதா அசை போட்டுக் கொண்டிருக்கும் பல்லில்லா அர்ச்சகர் இருக்கும் ஆத்திகுளம் பிள்ளையார் கோவிலுக்கு அருகில் சிவனே என்று ………..என்ற விலாசத்தில் வசிக்கும் ………………….. அவர்கள் 2ஆவது பார்ட்டியாகவும் ஆக இருவரும் நேரும் கூறுமாக நாலு மனசும் குளிர்ந்திருக்கையில் போடும் ஒப்பந்தம் இது. – (ஒரு ஃபுல்ஸ்டாப் கமா இல்லாதைக்கு எவ்வளவு பெரிய செண்டென்ஸ், சை!)

இந்த ஒப்பந்தத்தில் வீட்டு உரிமையாளர் அல்லது பார்ட்டி 1 என்பது வீட்டு உரிமையாளர்  அவர்களையும் வாடகைக்கு குடியிருப்பவர் அல்லது பார்ட்டி 2 என்பது வாடகைக்கு குடியிருப்பவர் மற்றும் அவருடைய வாரிசுகள் முதலினோர்களையும் குறிக்கும். (“இதை மாத்தி கீத்திப் போட்டா ஒரே பொங்கல் தான்” – பார்ட்டி 1).

வாடகைக்கு வருபவர் கவனிக்க: வீட்டு உரிமையாளர் ஒரு மாதிரி டென்ஷன் பார்ட்டி. மேலே பார்ட்டி 1 என்று போட்டிருப்பது டென்ஷன் ஆவதில் பார்ட்டி நம்பர் 1 என்று போட்டால் நன்றாக இருக்காதென்பதாலேயே டீஜெண்டாகப் போட்டிருக்கிறது. டென்ஷன் ஆகறதுக்கு எதுவும் இல்லையே என்று கூட சமயத்தில் டென்ஷன் ஆகி விடுவார். இதை எப்போதும் கவனத்தில் கொள்வது நலம். தவிர கீழே ஒப்பந்தத்தில் ப்ராக்கெட்டில் போட்டிருப்பது எல்லாம் பார்ட்டி 1 (டென்ஷன் ஆகி) உதிர்த்த முத்துக்கள் மற்றும் ஜெனரல் கமெண்ட்ஸ். மேலே படிக்க…

வீட்டு வாடகை ஒப்பந்தப் பத்திரத்தின் ஷரத்து / நிபந்தனைகள் யாவன:

1.    வீட்டின் உரிமையாளர் நம்பர் 4/567, மதுரை வண்ணாங்கம்மாய் பக்கத்தில் ரோட்டோரமாய் இருக்கற பெரிய வூடு என்ற முகவரியிலுள்ள வீட்டினை மாதம் ரூ. 50000 /-, எழுத்தில் ரூ._____ (எழுத்தில வேற சொல்லணுமா, நம்பர் படிக்கத் தெரியாது? மாடு மாறி வயசாறது? என்னது ஒரு முட்டை கூட போட்டிருக்கேனா, நான் என்ன கோழியா வாத்தியாரா முட்டை போடறதுக்கு?) வாடகைக்கு விடுவதற்கு ஒப்புக்கொண்டு, அதனை பார்ட்டி 2 வேறு வழியில்லாமல் “முன்னேயோர் ஜன்மாந்திரம் என்னென்ன பாவங்கள் மூட நான் செய்தேனம்மா” என்று சம்மதித்து ஏற்றுக்கொள்கிறார்.

2.    வாடகைக்கு குடியிருப்பவர் மேற்சொன்ன வாடகையை ஒவ்வொரு ஆங்கில மாதமும் 5ஆம் தேதிக்குள்ளதாக பெங்களுருக்கோ, சென்னைக்கோ, ஹைதராபாத்துக்கோ, மதுரைக்கோ அல்லது உரிமையாளர் அமெரிக்காவில் இருந்தால் அங்கேயோ வந்து நேரிடையாகச் செலுத்திவிட வேண்டியது.
(ஆன் – லைன்ல பிடுங்கறேன்னெல்லாம் பவுஷ் காட்டக் கூடாது. அப்படி ஆன் லைனில் தான் வாடகை தருவேன்னு அடம்பிடிச்சா அதன் ரசீதையானும் ப்ரிண்ட் அவுட் எடுத்து மாசாமாசம் நேரில் வந்து தந்து விட வேண்டியது.)

3.   வாடகைக்குக் குடியிருப்பவர் மின்சார கட்டணத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் அதன் அட்டவணையில் குறிப்பிட்டுள்ள தொகையை சரியான தேதியில் செலுத்திவிட வேண்டியது. (கரண்ட்டே இல்லையானா ரொம்ப ஷேமம். உங்க பாடு அது) அட்டவணை தீர்ந்து போனாலோ தொலைந்தாலோ பார்ட்டி 2 அதை மின்சார வாரியத்திடம் தெரிவித்து புதியதொன்றை வாங்கிக் கொள்ள வேண்டியது (அட்டவணையைத் தொலைச்சா அதை திருப்பி வாங்கறதுக்கு லோ லோனு அலையறது பின் பார்ட்டி 2 இன் தலையெழுத்துன்னு போடு. கரண்டு பில்லாச்சே சூடா இருக்கப் போறதேன்னு தண்ணியில நனைச்சா அவ்வளவுதான், மென்னியைத் திருகிப்பிடுவோம்.)

4.    இந்த ஒப்பந்தமானது இது கையெழுத்தான  தேதியிலிருந்து 11 மாதங்களுக்குச் செல்லுபடியாகிறது. இதனை நீட்டிப்பது இருதரப்பின் பேச்சு வார்த்தையிலும் இறுதி முடிவு வீட்டின் உரிமையாளரிடமும் (பார்ட்டி 1) உள்ளது. அவர் பாட்டுக்கு திடீர்னு 11 இல் ஒரு ஒண்ணை அழிச்சுப்பிட்டா ஙே’ வென்று முழிக்கக் கூடாது. ஒப்பந்தத்தை நீட்டிக்கிறேன்னு ஒப்பந்தப் பத்திரத்தைப் பிடிச்சு இழுத்து அது ஏதானும் ஆச்சுன்னா தெரியும் சேதி (எண் 3 ல் கடைசி வரியை மறுபடியும் பார்க்கவும் – மென்னியைத் திருகிப்பிடுவோம்)

5.    வாடகைக்குக் குடியிருப்பவர் வீட்டு உரிமையாளரிடம் முன்பணமாக ரூ. 75000/- (எழுத்தில் ரூ. இருபத்தி ஐந்தாயிரம்) செலுத்த ஒப்புக்கொள்கிறாரென்பதும் இந்தப் பணத்தை குடியிருப்பவர் மாதா மாதம் வாடகை தவிர குடுத்துண்டே இருக்கணும் என்பதும் அவர் தலையெழுத்து. வீட்டினை வாடகை பாக்கி அல்லது இன்னபிற மராமத்து செலவுகள் மிச்சமின்றி, வீட்டினை காலி செய்த பின் உரிமையாளரிடமிருந்து ஒரே ஒரு வாட்டி 25000 மாகத் திருப்பிப் பெற்றுக் கொள்ள வேண்டியது. இந்த முன்பணத்திற்கு வட்டி ஏதும் கிடையாது. இந்த முன்பணத்திற்கு ரசீது பாண்டியன் போக்குவரத்துக் கழக பஸ் டிக்கெட் பின்னால் நுணுக்கி நுணுக்கி என்ன எழுதியிருக்கோ அதான்.

6.    வீட்டு உரிமையாளர் குடியிருப்பவரிடம் 415 சாவிகளைக் கொடுத்திருக்கிறாரென்பதும், இதில் முன் கதவின் சாவி நம்பர் 4, வெளிக் கதவுகளின் சாவி நம்பர் 1 பின் கதவுகளின் சாவி நம்பர் 5 – மேல் தளத்தினுள்ள கழிவறை, குளியலறைகளின் கதவு சாவிகள் – 2, 7 மற்றும் ஆயிலைக் குடித்துப் பின் நீரை இறைக்கும் கம்ப்ரஸர்  மோட்டார் கதவின் சாவி – 15 ஆகியன. இந்த சாவிகளுக்கு சரியான பூட்டை குடியிருப்பவர் துரியோதனன் கடையில் வாங்கிக் கொள்ள வேண்டியது. இதில் மாடியில் உள்ள கழிவறை, குளியலறையை உபயோகப்படுத்தும் போது சாவி மற்றும் பூட்டினை ஏதாவது பத்திரமான இடத்தில் வைக்க வேண்டியது. (உள்ளே எடுத்துண்டு போய் அது ஏதானும் ஆச்சுன்னாலோ தவிர வெளியில வெச்சுட்டுப் போய் யாரானும் கதவை பூட்டிட்டு சாவியை எங்கயானும் தூக்கி எறிஞ்சுட்டாலோ நாங்க பொறுப்பில்லை. எண் 3 ல் கடைசி வரியை மறுபடியும் பார்க்கவும்.)

மாடியில் உள்ள குளியலறையைப் பயன்படுத்த விரும்பினால் அங்கே அடுக்கி வெச்சிருக்கும் ஏகபோக கட்டைகளின் மேலே தண்ணீர் தெறிக்காமல் குளிக்க வேண்டியது. (ஓண்ணொண்ணும் வாங்கப் பட்ட பாடு எங்களுக்குத்தான் தெரியும்,  குளியலென்ன வேண்டிக்கிடக்கு மாடில குளியல்? எல்லாம் வடாம் போடுவா கண்டுருக்கு!)

7.    வாடகைக்குக் குடியிருப்பவர் குடியிருக்கும் போது கதவை உள்புறமாகப் பூட்டிக் கொள்ள வேண்டியது. வீட்டினை காலி செய்யும் பொழுது சாமான்களோட வெளியில் வந்து வீட்டினை வெளிப் பக்கமாகப் பூட்ட வேண்டியது. ஆத்து மாமியை உள்ள வெச்சுப் பூட்டிட்டு தெரியாம பண்ணிட்டேன்னெல்லாம் ரகளை பண்ணினால் எங்களுக்கும் தெரியாது. இதன் மூலம் குடியிருப்பவருக்கு மாமியால்  மண்டையில் ஏதாவது மராமத்து பார்க்கும் நிலை ஏற்படின் அதற்கான செலவை குடியிருப்பவர் தானே பார்த்துக் கொள்ள வேண்டியது. நாங்க வேணுமின்னா அப்புறமா ஃபோன் பண்ணி “என்ன மாமா நன்னாருக்கேளா, மாமி மண்டைய பொளந்துட்டா போலர்க்கே, ஆனாலும் இவ்வளவு அழிச்சாட்டியம் ஆகாது”ன்னு பொதுவா சொல்லிட்டு மாமியை அப்புறமாக ஃபோனில் கூப்பிட்டு “என்ன இருந்தாலும் நியாயம்னு ஒண்ணு இருக்கோனோ மாமி”ன்னெல்லாம் சொல்லிப்போம். இந்த ஃபோன் சம்பாஷணைகளை தம்பதிகள் ஒருத்தரை ஒருத்தர் கன்ஸல்ட் பண்ணாமலிருப்பது (மாமா மண்டைக்கு) நல்லது.

8.    வாடகைக்குக் குடியிருப்பவர் வீட்டின் கட்டுமானங்களை மாற்றி அமைக்கவோ அல்லது வீட்டின் கட்டுமானத்திற்கு சிறிதேனும் தீங்கு விளைவிக்கும் எதையும் செய்யாதிருக்க வேண்டியது. அவ்வாறு ஏற்படுமானால் (எண் 3ல் கடைசி வரியை எதுக்கும் மறுபடி பார்த்துக் கொள்ளவும்) தவிர முதலாவது பார்ட்டி கொஞ்சம் டென்ஷன் பார்ட்டியுமானதால் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. இல்லையெனில் காக்கடாஸ்த்ர ப்ரயோக ப்ராப்திரஸ்து!

9.    மேற்படி இரண்டாவது பார்ட்டி (குடியிருப்பவர்) தான் வாடகைக்கு எடுத்திருக்கும் வீட்டினைத் தானும் தன் குடும்பத்தாரும் குடுத்தனம் நடத்த மட்டுமே பயன்படுத்த வேண்டியது. தன் குடும்பத்தார் தவிர பிறரை வாடகைக்கு அமர்த்தும் உரிமை குடியிருப்பவருக்குக் கிடையாது. (லக்கம்மாவுக்கு மட்டுமே உண்டு). மேற்படி 1ஆவது பார்ட்டி (உரிமையாளர்) குடியிருப்பவரின் சம்மதத்துடன் தனது வீட்டினை எப்பொழுது வேண்டுமானாலும் பார்வையிட குடியிருப்பவர் (இரண்டாவது பார்ட்டி) சம்மதிக்கிறார். வேற வழி?

10.    மேற்படி இரண்டாவது பார்ட்டி தொடர்ந்தாற்போல் மூன்று மாதங்களுக்கு வாடகையைக் குறித்த நேரத்தில் செலுத்தத் தவறும் பட்சத்தில் உரிமையாளர் டென்ஷனாகி அவரே வாடகையை தன் அக்கவுண்டில் போட்டுக் கொண்டு விடுவார். நேரே மடிக்கோலோட ஆத்துக்கும் வந்து விடுவார். அதோட இந்த ஒப்பந்தம் க்ளோஸ். ரைட் ரைட். அப்புறம் இரண்டாவது பார்ட்டியை தர தரன்னு வெளியேற்றும் உரிமை உரிமையாளருக்கு (முதல் பார்ட்டி) உண்டு. (அவரா கெளம்பிட்டா க்ஷேமம்.)

11. தோட்டத்தை குப்பை செத்தையில்லாம நீட்டாப் பெருக்கி வெச்சுக்க வேண்டியது, (பக்கத்தாத்துத் தென்னை மரத்திலேர்ந்து காய் மண்டையில் விழாம பாத்துக்க வேண்டியது) குடியிருப்பவர் பொறுப்பு. அப்படி ஒரு வேளை காய் தலையில் விழுந்துட்டா அதை எடுத்துண்டு மாடிக்குப் போயி சரியான தருணம் பார்த்து பக்கத்து வீட்டுக்காரர் மண்டையைப் பதம் பார்க்க முயல்வது, அதெல்லாம் உங்க சமத்து. எல்லாத்தையும் நாங்களே விவரமா சொல்ல முடியாது பாருங்கோ. ஆனா சண்ட சச்சரவு இல்லாம குடித்தனம் நடத்த வேண்டியது.

12. இதுக்கு மேல ஒப்பந்தம் போட்டா அவா ஆடுவா. இருந்தாலும் பவுஷென்ன பவுஷுன்னு நாங்க பாட்டு போட்டுண்டே போவோம். அப்படி என்னல்லாம் சேர்க்கிறோமோ அதை அப்போப்போ அனுப்பிண்டே இருப்போம்.

சாட்சிகள்

உங்காத்துக்காரா ரெண்டு பேர்                             மடிக்கோல் நாயகி காக்கடாஸ்ரீ                                                                      

எங்காத்துக்காரா ரெண்டு பேர்                                    குடியிருக்கப் போற  ஜீவன்

Advertisements