Tags

பேரு ஒரு மாதிரியில்லே? சரி விஷயத்துக்கு வரேன். ஒரு நா நானும் இவளும்  மரத்துல மாட்டிண்டிருக்கற ஏதோவொரு வஸ்துவை எடுக்க தொரட்டி, புளியங்கம்பு இதெல்லாம் வைச்சு பிரயத்தனம் பண்ணிக்கொண்டிருந்த போது ஒரு நடுத்தர வயதுக்காரர் ஒல்லியாக இடுங்கிய கண்களுடன் (கவனிக்க) மைல்டாக சிரித்த படி நான் எடுக்கறேன் என்று கூறி விட்டு கம்பையோ எதையோ வைத்து லாவகமாய் எடுத்து விட்டார். என்ன எடுத்தார் என்பது நினைவில்லை.

பின் அவரிடம் நன்றி பாராட்டுகையில் தன் ஏரியா விலாசம் சொல்லி அங்கு வருமாறு பணித்தார். ஏதோ சொல்கிறாரே என்று நானும் இவளும் கிளம்பி விட்டோம். ஆட்டோக்காரர் எங்கையோ ரொம்ப முன்னாலேயே நிறுத்தி ‘இந்தா இப்படிப் போங்க, வரும்’ என்று சொல்லி விட்டுட்டர்.

இறங்கி தெருவுக்குள்ளே நடந்தால் ஜனமெல்லாம் வெகு அமைதியாய் அங்குமிங்கும் வெகு நிதானமாய் போய்க் கொண்டிருந்தனர். அமைதியென்றால் அப்படியொரு அமைதி. இந்த விலாசம் என்னவென்று விசாரித்து அங்கே போய் பார்த்தால் ஒரே ஏழைமயமாய் இருந்தது. கந்தலான உடை, அழுக்கடைந்த கேசம், ஒரு மாதிரி சுத்தமாயும் இல்லாமையுமாய் இருந்த வீடுகள், ஏதோ ஒரு மாதிரி இருந்தது. கையில் கொண்டு போயிருந்த பழைய துணிமணி, சாமான்கள் இன்னமும் கொஞ்சம் பைசா எல்லாவற்றையும் அங்கிருந்தவர்களிடம் கொடுத்தால் ஏனோதானோவென்று வாங்கிக் கொண்டார்கள். பெரிசாக பாராட்டுவார்கள் என்றெல்லாம் எதிர்பார்க்கவில்லை என்றாலும் அது நன்றியறிவித்தலா, அல்லது ஒரு விட்டேத்தியான புன்னகையா, ஒன்றும் புரியவில்லை.

பின்னர் சிறிது நேரம் அங்கிங்குமாய் அலைந்து கொண்டிருக்கையில் ஒரு விஷயம் புலப்பட்டது. அனைவரும் ஏதோ போதையிலிருப்பதாய்த் தோன்றினார்கள். என்ன கேளு, ஒரு விளக்க முடியாத புன்னகை, ஆழ்ந்த தூக்கத்திலிருக்கும் போல கண்கள், அதில் உயிரே இல்லாத ஒரு பார்வை, இப்படி. ஒரு கடையில் போய் ஏதாவது வாங்கலாம் என்று கடைக்காரரை நோக்கினால் அவரும் அதே புன்னகை, அதே ஆழ்ந்த நோக்கில் ஒரு பார்வை. சரி, இது சரிப்படாது, கிளம்பலாம் என்று பேருந்து நிலையம் நோக்கிச் சென்று ஒரு பேருந்தில் ஏறி விட்டோம்.

வழியெல்லாம் ஒரே சிந்தனை, இது எந்த இடம்? யாரிவர்கள்? கொஞ்ச நேரம் அங்கே சுத்திக் கொண்டிருந்ததில் நமக்கும் ஏதோ மனதின் ஆழத்தில் ஒரு இனம்புரியாத தாக்கம் இருக்கிறதே? எப்படி இவ்வகை அமைதி சாத்தியம்,
அதுவும் குழந்தை முதல் பெரியவர் வரை? இவ்வாறெல்லாம் யோசித்துக் கொண்டே இருந்தேன் வழியில், பேருந்து போய்க் கொண்டே இருந்தது, சட்டென்று பார்த்தால் வந்த வழியே மறுபடியும் வருவதாய் ஒரு நினைப்பு. ஊர்ஜிதம் செய்து கொள்வதற்கு ஜன்னல் வெளியில் பார்த்தால் ஏற்கனவே பார்த்த கறு நிற பெயிண்ட் அடித்த ப்ளாட்பார கடை. என்னடா இதுவென்று சைட் பின் சீட்டில் இருந்த நடத்துனரைத் திரும்பிப் பார்த்து “என்ன சார், வண்டி சுத்திக்கிட்டே இருக்குது வந்த பாதையிலே” என்று கேட்கும்போது தான் அவர் முகத்தையும் பார்த்தேன்.

அதே விட்டேத்திப் பார்வை, ஆழ்ந்த கண்கள், ஒரு சாயலில் எங்களுக்கு மரத்திலிருந்து எதையோ எடுத்துக் கொடுத்தவர் போலவே இருந்தார். “அதுவா, இங்க வந்துட்டீங்கள்ள, இனி எங்கையும் போக முடியாது” என்றார்! தூக்கி வாரிப் போட்டது. எப்படியடா தப்பிப்பது என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கும் போது ஒரு உண்மை தெரிந்தது. இது ஜோம்பி நகரம், அதாவது நடைபிணங்கள் என்று சொல்வார்களே, அத்தகைய நகரம் என்பது. அதான் எல்லாரிடமும் அந்தப் பார்வை, சிரிப்பு எல்லாம்.

தடாரென்று விழித்துக் கொண்டேன். சை, கனவா இது?!