Tags

, , , , ,

((( IRCTC.CO.IN தளத்தில் டிக்கெட் புக் செய்யப் பிரய்த்தனப்பட்டு விட்டு கொலைவெறியுடன் போட்ட பதிவு, சற்று காரசாரமாக இருக்கலாம்.)))

மன்னன்: இவனுக்கு IRCTC.CO.IN வலைத்தளத்தில் அரசவையிலிருக்கும் அனைவருக்கும் ஐந்து ஐந்து பேராக, பழைய ப்ரெளஸரில் வைத்து டிக்கெட் புக் பண்ணும் தண்டனை விதிக்கிறேன்.

குற்றவாளி: ஆ, மன்னா, என் கொற்றவனே, என்னால் தாங்காது, ஐயனே, கசையடியையும் பொறுப்பேன், செக்கிழுக்கச் சொன்னாலும் இழுப்பேன், அது மட்டும் வேண்டாம் என் மன்னவா…!

மன்னன்: நீ செய்த குற்றத்திற்கு சிரச்சேதத்திற்கு இணையான இதைத் தவிர வேறு தண்டனை இல்லை, இழுத்துப் போங்கள் இவனை!

அமைச்சர்: மன்னா, இதென்ன விசித்திரமான தண்டனையாக இருக்கிறது? அருள்கூர்ந்து சற்று விளக்குவீர்களா?

மன்னன்: வேறென்ன வேலை எனக்கு? டிக்கெட் புக் பண்ணி இருக்கிறீர்களா அதில் எப்போதானும்? வாழ்க்கையில் ஒவ்வொரு கணமும் எவ்வளவு இனிதானது என்று புரிந்து விடும் அதை முயற்சி செய்தீர்களேயானால்.
இது நம் போர் வீர்ர்கள் பயிற்சி எடுக்கும் பாதாள தீச்சட்டி முறையைக் காட்டிலும் பொறுமையை சோதிப்பது. அதில் எப்படி தடைக்கற்கள் உண்டோ, இதிலும் அதே போல பலப்பல உண்டு.

அமைச்சர்: விளக்கிச் சொல்லுங்கள் மன்னா, ஆவலாய் இருக்கிறது!

மன்னன்: சரி. முதலில் ப்ரவுஸரைத் திறவுங்கள், அட அமைச்சரே, முண்டம் முண்டம்! ப்ரவுஸர் ஐயா, ட்ரவுசர் அல்ல, உங்களையும் பெற்றாளே ஒருத்தி! மூடுமய்யா!

அமைச்சர்: மன்னிக்கவும் மன்னா, இந்த தலைப்பாகை காதைச் சுற்றியுள்ளதால் சரியாகக் கேட்கவில்லை.

மன்னன்: திறந்தீர்களா, இப்போது தடைக்கற்கள் ஒவ்வொன்றாகச் சொல்கிறேன் கேள்மின். IRCTC.CO.IN என்று அட்ரஸ் பாரில் அடித்து விட்டு எண்டர் அடிப்பீர்கள். உடனே ஜிகினா ஜிகினாவாக ஒரு ஏரோப்ளேன் அல்லது ஏதாவது ஒரு வஸ்துவுடன் அந்த தளம் ஓப்பன் ஆகும். இதுவே பலருக்குத் தடைக்கல்லாகி விடும். அது எந்த ரூபத்தில் எல்லாம் வருகிறது என்று பீஹெச்டீயே பண்ணலாம். சிலவற்றைச் சொல்கிறேன். 1) தளம் ஓப்பன் ஆகாது, போடா நான் பிஸியாக இருக்கிறேன் எனும் 2) தளம் அரையும் குறையுமாய் ஓப்பன் ஆகும், வெறும் லாகின் ஸ்க்ரீன் மட்டும் வரும் / வராது. பிராணன் போய் விடும். 3) எல்லாம் சரியாக ஓப்பன் ஆனால் ஆவலாய் பயனாளர் பெயர், பாஸ்வேர்டு அடிப்போம், உடனே அது “சீ கடங்காரா, பேக் பட்டனை ப்ரஸ் செய்து விட்டாய், குளிக்காமல் டிக்கெட் புக் செய்கிறாய், இன்று காயத்ரி மந்த்ரம் சொல்லவில்லை, ரசத்தில் உப்பே இல்லை என்று ஏதேதோ சொல்லிக் கோபித்துக் கொண்டு போனால் போகிறதென்று ரீ-லாகின் என்று காட்டும்.

அமைச்சர்: ஆ, இதைப் போய் கொடுமை என்கிறீர்களே மன்னா, அதான் ரீ-லாகின் என்கிறதே…

மன்னன்: வெறும் தலைப்பாகை தான் இருக்கிறது உம் தலையில்.

அமைச்சர்: ஆமாம் மன்னா

மன்னன்: என்னத்த நோமாம் மன்னா, மேலே கேளுமய்யா. சரி என்று ரீ-லாகின் பண்ண முயற்சிப்பீர். இதற்குள் அது தன் குக்கீஸை உம் கம்ப்யூட்டருக்குள் போட்டு விடும், எனவே ப்ரவுஸர் மறுபடி மேற்சொன்ன சீ கடங்காரா பாட்டைக் காண்பிக்கும்.

அமைச்சர்: ஓ, (தனக்குள்..) குக்கீஸைக் கம்ப்யூட்டருக்குள் அங்கிருந்த படியே எப்படி என் பிஸியில் போடுவார்கள், தொழில்நுட்பம் அசாதாரண வளர்ச்சி தான். அதான் அன்றைக்கு அந்த டப்பாவிலிருந்து (சிபியு) ஒரே எறும்பாய் வந்ததோ, இருக்கும் இருக்கும்.

மன்னன்: சரி என்று நீரும் அதையெல்லாம் க்ளியர் பண்ணிவிட்டு (அமைச்சர், இதெப்படி நாம் சிபியுவுக்குள் கையை விட்டு க்ளீன் பண்ணுகிறேன் என்று ஷாக் வாங்கியது மன்னனுக்குத் தெரியும் என்று திகைப்பாய்ப் பார்க்கிறார்) மறுபடி தன் முயற்சியில் சற்றும் மனந்தளராத அமைச்சராய் முயற்சி செய்வீர். ஒரு வழியாய் லாகின் ஆகும். “என் பயணத்தைத் திட்டமிடு” என்ற பகுதியில் நீர் புறப்படும் இடம், போ…ய்…ச் சே…ர விரும்பும் இடம் (இதில் மன்னன் சற்று அழுத்தம் கொடுக்கவே அமைச்சர் ஒரு மாதிரி பயத்தால் நெளிகிறார்). எல்லாம் போடுவீர். என்றைக்கு பயணம் என்பதையும் தேர்ந்தெடுத்து விட்டு “தேடு” என்று க்ளிக்குவீர். அன்றைக்கு யார் மூஞ்சியில் முழித்தீரோ அதற்கேற்ப சீ கடங்காரா பாட்டோ (அமைச்சர், மறுபடியுமா என்று வாயைப் பிளக்கிறார்) அல்லது ரயில் அட்டவணையோ வரும். அதில் நீர் ஒவ்வொன்றாகப் பார்த்து, அதில் இடம் இருக்கிறதா, எந்தக் க்ளாஸில் இருக்கிறது என்றென்றைக்கெல்லாம் இருக்கிறது என்ற ஸ்நேக் அண்ட் லேடர் கேம் எல்லாம் ஆடி ஒரு வழியாய் “இதோ என் ரயில்” என்று க்ளிக் செய்வீர், அதில் இடமும் இருக்கிறதென்று வைத்துக் கொள்வோம் ஒரு பேச்சுக்கு…

அமைச்சர்: ஒரு வேளை போரில் நாம் வென்றால் என்பீர்களே, அது போலத்தானே மன்னா? (அமைச்சருக்கு நடுநடுவே இப்படி ஏதாவது கேட்டோ சொல்லியோ தான் ஒரு குட் பாய் என்று காட்டிக் கொள்ள எப்போதுமே விருப்பம்)

மன்னன்: ஓய்…! தலையை சீவி விடுவேன் ஜாக்கிரதை! யாரிடம் காட்டுகிறீர் உம்ம உதாரை? பேசாமல் கேட்டுக் கொண்டிரும். ரயில் இடம் இருக்கிறது என்று “புக்” என்பதைக் க்ளிக் செய்வீர், உடனே காட்டும் அட்டவணையில் உம் பெயர், உம் மனையாள் பெயர், வயது, ஜன்னலோரமாய் உட்காருகிறீரா, இல்லை உச்சாணிக் கொப்பில், அட அப்பர் பெர்த்தய்யா, அங்கே போகிறீரா என்றெல்லாம் கேட்கும், சும்மா கேட்கும், தருவது என்னவோ அதன் இஷ்டம் தான். நீங்கள் அதையெல்லாம் ஒரு வழியாக, வயசு, நீர் ஆணா பெண்ணா, சைவமா அசைவமா, மனையாள் மனுஷியா ராக்ஷஸ ஜென்மமா என்று கேட்கும் எல்லாவற்றையும் ஃபில் அப் செய்து விட்டு, “மேக் பேமெண்ட்” என்பதை க்ளிக்குவீர்…ஹி ஹி ஹி..

அமைச்சர்: என்ன சிரிக்கிறீர்கள் மன்னா?

மன்னன்: (வேகவேகமாகப் பேசுகிறார்).. அத்த க்ளிக் பண்ண ஒடனே சீ கடங்காரா பாட்டு வந்தா, (மெ து வா க) எ…ப்…டி இருக்கும்? கையைப் பிசைந்து நம்பியார் போல சைடு விழி விழித்துச் சிரிக்கிறார்.

அமைச்சர்: பயங்கரமாய் இருக்கிறதே மன்னா இது?

மன்னன்: இன்னும் கேளும், உமக்கு வரும் கொலை வெறியில் அந்த கம்ப்யூட்டரையே ஒரு உடை உடைக்கலாமா என்று தோன்றும், தோன்ற வேண்டும், சொரணை இருந்தால்…(அரசன் கடுப்பாகிறான், நிறைய அனுபவம் போல). நீர் சரி போகட்டும் என்று ரீ-லாகின் செய்வீர். குக்கீஸ் நியாபகம் இருக்கிறதா?

அமைச்சர்: மன்னா, மறுபடி ரீ-லாகினா, தாங்க முடியவில்லையே, இதைப் போய் சாதாரண தண்டனை என்று விட்டேனே?

மன்னன்: கேளூம், கேட்டுக் கொண்டிரும், மறுபடி லாகின் செய்து, ரயிலைத் தேர்ந்தெடுத்து, வயது, உச்சாணிக் கொப்பு, எல்லார் பெயர், சைவம் எல்லாவற்றையும் ஃபில் அப் செய்து விட்டு கீழே பார்ப்பீர், அங்கே செக்யூரிட்டிக்காக காண்பிக்கப் படும் இமேஜ் தெரியாது! கடுப்பாகிப் போய் (பல்லைக் கடிக்கிறான் அரசன்), மறுபடி ரீ-லோட் இமேஜ் என்பதை க்ளிக்கி, க்ளிக்கி, நாசமாப் போக நீ என்று மீண்டும் க்ள்ளி…க்…கி (கண் சிவந்து விடுகிறது மன்னனுக்கு, ஆள் காட்டி விரலை க்ளிக் செய்வது போலவும் அமைச்சர் கண்ணை நோண்டுவது போலவும் பயங்கரமாய் ஆட்டுகிறான்) க்ளிக்கினால், வரவே வராது. அது இல்லாமல் மேலே தொடரவும் முடியாது. அமைச்சரைப் பார்க்கிறான் அரசன், கண்களில் கொலை வெறி மற்றும் நீரோடு…

அமைச்சர்: அவ்வ்வ்வ், அப்புறம்?

மன்னன்: இப்போது ஏற்கனவே டவுசர் கழண்ட நிலையில் இருக்கும் நீங்கள் ப்ரவுசரை க்ளோஸ் செய்து விடுவீர்கள், மறுபடி லாகின், சீ கடங்காரா, குக்கீஸ் க்ளியர், லாகின், ரயில் அட்டவணை, உச்சாணிக் கொப்பு எ….ல்….லாம் செய்……து…

அமைச்சர்: ?!

மன்னன்: மறுபடி “மேக் பேமண்ட்” வரும் வேளையில் நீங்கள் உஷாராக செக்யூரிட்டி இமேஜ் தெரியுமா என்று பார்ப்பீர்கள். தெரிந்தால் ஒரு ஆவல் கலந்த அலுப்புடன் க்ளிக் செய்வீர்கள் மேக் பேமண்ட்டை. அது க்ரெடிட் கார்டா, எந்த பேங்க்கு எல்லாம் கேட்கும், ஆகா முன்னேறுகிறோம் என்று நினைத்து எல்லாவற்றையும் கொடுப்பீர்கள். அப்போது பேங்க் கேட்வே வழியாகப் போய்….சீ கடங்காரா என்றால்….!

அமைச்சர்: (அழுதே விட்டார்) மன்னா…அய்யய்யோ, இது வேணாம் ராசா, நான் குதிரையிலேயோ ரதத்திலேயோ ஊருக்கெல்லாம் போகிறேன், அதெல்லாம் கூட எதுக்கு? ஊருக்கே போகாமலிருக்கிறேன், என்னை விட்டு விடுங்கள்.

மன்னன்: இதற்குப் பின் மேற்சொன்ன அனைத்தையும் மறுபடி ஒரு வாட்டி செய்து விட்டு, மிகுந்த பொறுமையுடன் இருந்தால் உமக்கு ஒரு வேளை டிக்கெட் இருக்கலாம். அதிலும் நீங்கள் பதட்டத்தில் உம் மனையாளை ஆண் என்று போட்டு விட்டீரேயானால் தொலைந்தீர். அது இல்லாவிடில் உம் பாஸ்வேர்டை மறந்து விடுவீர். மறுபடி முதலிலிருந்தே ஆட வேண்டும் கேமை. இது எல்லாம் போக நீ இந்த பெர்த்தில் உட்காரு, உன் மனையாள் வேறு பெர்த்தில் என்றெல்லாம் விளையாடி விடும், ஜாக்கிரதை, நடுநடுவில் இதில் எங்கு வேண்டுமானாலும் சீ கடங்காரா பாட்டு வரலாம். இதுக்கே இப்படியென்றால் ரிட்டர்ன் டிக்கெட் புக் பண்ணுவதை யோசியும்!

இது எல்லாவற்றிற்கும் மேலாக, மேற்சொன்ன எல்லாமே சரியாக நடந்து நீர் பேமண்ட்டும் செய்து விட்டீர் என்று வைத்துக் கொள்வோம். அப்போதும் கங்க்ராஜுலேஷன்ஸ், உங்கள் டிக்கெட் புக் ஆகி விட்டது என்ற தகவல் வராமல் என்னடாவென்று ஒரு வெற்று ஸ்க்ரீனைப் பார்த்துக் கொண்டேயிருப்பீர், மறுபடி ஒரு முறை மேக் பேமெண்ட் செய்வீர், மறுபடி ஒரு முறை என்று ஒரு ஐந்தாம் முறையாக உங்கள் டிக்கெட்டைக் காண்பிக்கும். பார்த்தால் உங்கள் பாங்கி கேட் வேயிலிருந்து ஒரு ஐந்து முறை ஒரே டிக்கெட்டிற்கான பணத்தை லவட்டியிருக்கும். சும்மா ஒளவொளாக்கட்டிக்குத் தான். பின்னர் ஒரே முறை பணத்தை எடுத்துக் கொண்டு மிச்சத்தைத் திருப்பி விடுவார்கள். ஆனால் வயிறு கலங்கும் பாருங்கள் பேங்க் ஸ்டேட்மெண்ட்டைப் பார்த்து, பேய்ப் படங்கள் தோற்றது போங்கள்!

அமைச்சர்: மன்னா, தாங்கவே முடியவில்லை, இப்படித்தானா நம் மக்கள் டிக்கெட் புக் செய்து ஊருக்குப் போகிறார்கள்? இந்த கூகிள் என்று ஒன்று இருக்கிறதாமே, அவர்களை யோசனை கேட்கக் கூடாதா ரயில்வே அமைச்சர்?

மன்னன்: அவரிடம் சொன்னேன், கூகிளா, இதோ நம்ம முத்தையா முரளிதரன் நல்லா போடுவாரே என்று சொல்லி விட்டார், அவரை ராஜினாமா செய்யச் சொல்லி விட்டேன். அவருக்கும் இதே தண்டனை தரலாம் என்று யோசனை….அது சரி, நான் கேட்ட மன்த்லி ரிப்போர்ட் எங்கே, உங்களுக்கும் இதே தண்டனை தரவா எனக் கேட்கவே அமைச்சர் ஓட்டமெடுத்து விட்டார்.

பின்குறிப்பு: பதிவை ஆரம்பித்த நடுவிலேயே ரோசப்பட்டுக் கொண்டு டிக்கெட் புக் செய்ய அனுமதித்து விட்டது தளம். பிழைத்தேன்.

Advertisements